சென்னை:
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 54வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா வருடந்தோறும் 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இத்திருதலத்தின் 54வது ஆண்டு திருவிழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. செப்டம்பர் 8ம் தேதி வரை 11 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அமைதி அல்லது சமாதானம் என்ற மைய கருத்தில் விழா கொண்டாடப்படுகிறது.
கொடியேற்று விழாவையொட்டி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும், காலை 5.30 மணி, 6.30 மணி, 11 மணி அளவில் தமிழில் திருப்பலியும் மற்றும் காலை 7.30 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலியும் நடந்தன. இதையடுத்து மாலை 4.45 மணிக்கு புனித ஆரோக்கிய மாதா கொடி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆலய வளாகத்தில் இருந்து ஊர்வலமாக எலியட்ஸ் பீச் சாலை மற்றும் பெசன்ட் நகர் முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதையடுத்து சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடத்திய பின் புறாக்கள், பலூன்கள் மற்றும் பலூன்களால் ஆன ஜெபமாலைகள் பறக்க விடப்பட்டன.
பின்னர் புனித ஆரோக்கிய மாதா மற்றும் குழந்தை ஏசு உருவம் பொறிக்கப்பட்ட 12 அடி நீள கொடியை 75 அடி உயர வெண்கல கம்பத்தில் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து இன்று (30ம் தேதி) நற்கருணை பெருவிழா, கூட்டுத் திருப்பலியும், நற்கருணை பவனியும், நற்கருணை ஆசீரும் நடைபெறும். 31ம் தேதி நலம் பெரும் விழா, செப்டம்பர் 1ம் தேதி இளையோர் விழா, 2ம் தேதி பக்தசபை விழா, 3ம் தேதி நற்கருணை பெருவிழா, 4ம் தேதி இறையழைத்தல் தினம், 5ம் தேதி ஆசிரியர்கள் தினம், 6ம் தேதி குடும்ப விழா, 7ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கூட்டு திருப்பலியும், தொடர்ந்து அன்னையின் ஆடம்பர தேர்பவனி திருவிழாவும் நடைபெறும். 8ம்தேதி காலை 2 மணி முதல் தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும்.
தொடர்ந்து அன்னையின் பிறப்பு பெருவிழாவும், அன்னைக்கு முடிசூட்டு விழாவும் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருப்பலியை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இந்த விழாவையொட்டி தினந்தோறும் காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு திருப்பலிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடக்கின்றன.
ஆண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அதிபரும், பங்கு தந்தையுமான அருளப்பா தலைமையில் தமிழக ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் பங்கு மக்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகிறன்றனர்.

பத்திரிகையாளர் இல்லத் திருமண விழா
பத்திரிகையாளரும் சமூக சேவகருமான எம்.ஜெயராஜ் இல்லத்திருமண விழாவில் மக்கள் ஆணையம் பத்திரிகை ஆசிரியர்






