RISE செயலி – புகையிலை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு – முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்ட விழிப்புணர்வு :

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (31.05.2023) சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில், சுகாதார நலப்பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான Rapid Immunization Skill Enhancement (RISE) செயலி தொடங்கி வைத்து, பயிற்சி கையேடு வெளியிட்டு, உலக புகையிலை ஒழிப்பு தினம்-2023  முன்னிட்டு, புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியினை ஏற்று,  புகையிலை பயிரிடுவதை கைவிட்டு மாற்று பயிர் தேர்ந்தெடுத்த விவசாயிகளுக்கும் மற்றும் பீடி சுருட்டும் தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழில் தேர்ந்தெடுத்த தொழிலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்ட விழிப்புணர்வு குறுந்தகட்டினை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
மருத்துவத் துறை அறிவிப்புகள்
            மருத்துவத் துறையின் 2023-24ஆம் ஆண்டு மானியக்கோரிக்கை அறிவிப்பில் 106 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்றைக்கு கொல்லிமலையில், மக்களுக்கு ஹிமோகுளோபினோபதி மருத்துவ சிகிச்சைகளுக்காக, பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 15 மாவட்டங்களில் 30 ஒன்றியங்களில் 9 இலட்சத்து 13 ஆயிரம் மலைவாழ் மக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. அப்படி கண்டறியப்பட்ட மக்களுக்காக பரிசோதனை மற்றும் சிகிச்சை என்கின்ற வகையில் ரூ.40 கோடி செலவிலான அந்த திட்டம் கொல்லிமலையில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் என்பது 1985 ஆம் அண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் 11 வகையான தடுப்பூசிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு 12 வகையான நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் நிகழ்வின் மூலம் 9.16 இலட்சம் பச்சிளங் குழந்தைகளும், 10 இலட்சம் கர்ப்பிணித் தாய்மார்களும் தொடர்ந்து பயன்பெற்று வருகிறார்கள். தொடர்ச்சியாக தட்டம்மை ரூபெல்லா நோய் நீக்குதல் என்கின்ற திட்டத்திற்கான பயிலரங்கம் இன்றைக்கு தொடங்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாது சுகாதார நலப்பணியாளர்களின் நலன் திறன் மேம்பாட்டிற்காக Rapid Immunization Skill Enhancement என்கின்ற வகையில் RISE என்கின்ற புதிய செயலி தொடங்கி வைக்கப்பட்டு கையேடு வெளியிடப்பட்டது. 
தேசிய மருத்துவ ஆணையம்
            கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கூட தமிழ்நாட்டில் திருச்சி, சென்னை ஸ்டான்லி, தர்மபுரி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது என்கின்ற செய்திகள் வெளிடப்பட்டு வருகிறது. நாங்கள் ஏற்கெனவே NMC சார்பில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது, குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்திருக்கிறோம். அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள், மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் மருத்துவத்துறையைச் சார்ந்த அலுவலர்களை டெல்லிக்கு சம்பந்தப்பட்ட உயரலுவர்களைச் சந்தித்து பேசுவதற்கு அனுப்பியிருக்கிறார்கள். அதோடு மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் இன்று இரவு சென்னைக்கு வருகிறார்கள். நாளை நானும் இத்துறையின் செயலாளரும் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களை சந்தித்து டெல்லிக்கு சென்று மாண்புமிகு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்.மான்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து மருத்துவ துறை சம்பந்தப்பட்ட தேவைகளை விளக்கிக்கூறி, இப்பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேசவுள்ளோம். அதன்பின், மாண்புமிகு  ஒன்றிய ஆயுஷ் அமைச்சர் திரு.சர்பானந்த சோனவால் அவர்களை சந்தித்து, திருச்சியில் எய்ம்ஸ் சித்த மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பான கோரிக்கையினை முன்வைக்கவுள்ளோம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சிறிய குறைபாடுகளுக்கெல்லாம் அங்கீகாரம் ரத்து போன்றவைகள் ஏற்புடையது அல்ல.
            சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் காக்குளர் இம்பிளான்ட் என்னும் காது கேட்கும் கருவி 379 பேருக்கு பொறுத்தப்பட்டுள்ளது. கல்லீரல்  மாற்று அறுவை சிகிச்சை 11 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 266 பேருக்கும், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை 108 பேருக்கும், இதயமாற்று அறுவை சிகிச்சை 4 பேருக்கும் செய்யப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்களின் வருகை கையேடு சரியாக பராமரிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். நமது துறையின் சார்பில் அந்த மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் அதற்கு பதிலளித்து இருக்கிறார்கள். இன்னொரு குறை அவர்கள் சொல்லியிருப்பது அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருக்கின்ற சிசிடிவி கேமராக்கள் சரியாக பயன்பாட்டில் இல்லை என்பது. அதாவது பயோமெட்ரிக், சிசிடிவி கேமரா போன்ற சிறிய குறைகளுக்காக ஒரு வரலாற்று சிறப்புமிக்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளியவர்கள் பயன்பெற்று வருகின்ற மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திற்கு இதுபோன்ற அச்சுறுத்தல் என்பது மிகவும் கவலையளிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது.
தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கட்டமைப்புகள், மருத்துவ சேவைகள் அதிகரிப்பு
            தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் ஜனவரி 2022-ல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையில் ஒன்றிய அரசின் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தவுடன் அந்த கல்லூரிகளின் கட்டுமானப் பணியினை விரைவுப்படுத்தி ஒவ்வொரு கல்லூரி மருத்துவமனைக்கும் மருத்துவ சேவையை திறந்து வைக்கும் பணியினை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறோம். மிக வேகமாக மருத்துவமனை கட்டமைப்புகள் முடிக்கப்பட்டு திருவள்ளுர், கிருஷ்ணகிரி, விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி போன்ற மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்றுக்கு முன்தினம் 500 படுக்கைகளுடன் கூடிய திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நானும், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களும் நேரடியாக சென்று திறந்து வைத்தோம். இந்த நிலையில் நாமக்கல், நாகப்பட்டினம், ஊட்டி, இராமநாதபுரம் ஆகிய நான்கு இடங்களில் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, விரைவில் திறந்து வைக்கப்படும். 
            தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு என்பது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டிருக்கிறது. 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் 2021-22ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை 1.30 கோடியாக இருந்தது, அது தற்போது 1.41 கோடியாக உயர்ந்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் பன்மடங்கு உயர்ந்து மக்கள் பணி ஆற்றும் வகையில் அமையப்பட்டு வருகிறது. ஆகவே CCTV கேமராக்கள், பயோமெட்ரிக் போன்ற சிறிய காரணங்களுக்காக தேசிய மருத்துவ ஆணையம் பற்பல சாதனைகளை புரிந்த ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி போன்ற பிற கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து என்று கூறுவது ஏற்புடையதல்ல, அதற்குரிய தீர்வு உடனடியாக காணப்படும் என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மரு.எழிலன் நாகநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு செயலாளர் திருமதி.ரீட்டா அரிஷ் தக்கர், இ.ஆ.ப., உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் திரு.லால்வீனா, இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதிஷ், இ,ஆ,ப., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் திரு.ம.கோவிந்தராவ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.தி.சி.செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,

RISE செயலி – புகையிலை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு – முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்ட விழிப்புணர்வு :

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,