அதிமுக வேட்பாளர்களுக்கு எடப்பாடி வேண்டுகோள் : நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டி அதிமுக வேட்பாளர்கள், கழக தொண்டர்கள் என அனைவருக்கும் எடப்பாடி கே. பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : –

நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத் தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நிலையில்,
கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு இரவு, பகல் பாராமல், ஊணுறக்கம் துறந்து உழைத்துக்கொண்டிருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் விசுவாசத் தொண்டர்களுக்கும்; கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சங்கங்களின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும்; மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்கிட ஆவலுடன் இருக்கும் எனதருமைத் தாய்மார்களுக்கும்; நாளைய தேசத்தை வழிநடத்தக் காத்திருக்கும் இளைஞர்களுக்கும்,
இளம் பெண்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், வணிகப் பெருமக்களுக்கும், அரசு ஊழியர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் முதற்கண் எனது அன்பு கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி,
தமிழர் உரிமை மீட்போம்; தமிழ் நாடு காப்போம்’’, “ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்” என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டு, மத்தியில் தமிழ் நாட்டின் நியாயமான கோரிக்கைகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான முழு அங்கீகாரத்தையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கிடுமாறு, கழகப் பொதுச் செயலாளர்’’ என்ற முறையில், கடந்த 24.3.2024 முதல் தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் சூறாவளி தேர்தல் பிரச்சார
சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். எனது இந்த சுற்றுப் பயணத்தின்போது, மக்களைப் பாதுகாக்கும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை நிரூபிக்கின்ற வகையில் கோடானு கோடி மக்கள் திரண்டிருந்து, எங்கள் வாக்கு இரட்டை இலைக்கே, முரசு சின்னத்திற்கே என விண்ணதிர முழக்கமிட்டது, இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள
மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழா’’ என்று கொண்டாடப்படும் இந்தத் தேர்தலில், நீங்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்து, ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்பது தான் உங்கள் முன் வைக்கும் மிக முக்கியமான கோரிக்கை. நம்முடைய ஓட்டு புனிதமானது; நம்முடைய ஓட்டு விலை மதிப்பிட முடியாத அளவு உயர்ந்தது. எனவே, வாக்களியுங்கள். அப்படி வாக்களிக்கும் முன் நமக்கான இயக்கம், நமக்கான ஆட்சி எது? எந்தக் கட்சி ஏழை, எளிய, நடுத்தர, உழைக்கும் மக்களுக்கு ஊன்றுகோலாகவும், உதவும் நண்பனாகவும் இருக்கிறது என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்த்து வாக்களியுங்கள். மக்களிடையே அமைதியையும், சமாதானத்தையும், சகோதர உணர்வையும், சமத்துவத்தையும் வளர்க்கும் கட்சி; இதுநாள்வரை வளர்த்து வரும் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிப்பீர்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை. தெளிந்த சிந்தனையும், பரந்த உள்ளமும் கொண்ட உங்கள் வாக்கு இந்த தேசத்தில் அன்பும், அமைதியும் பெருகிட உதவட்டும். ஒன்று எங்கள் ஜாதியே; ஒன்று எங்கள் நீதியே; உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’’ என்ற தத்துவத்தை தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொடங்கிய இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ் நாட்டில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இயக்கம். கழக ஆட்சிக் காலங்களில் மக்களிடையே சாதி, மத பிளவுகளோ, மத்தியில் பெரும்பான்மை – சிறுபான்மை என்ற பாகுபாடு காட்டியோ மக்களைப் பிரித்து ஆளாமல், ஒன்றே குலமென்று பாடுவோம்; ஒருவனே தேவன் என்று போற்றுவோம்’’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையிலும், அம்மா அவர்களின் நல்லாசியோடு எனது தலைமையிலும், அமைதியான நிர்வாகம் மற்றும் நல்லாட்சி நடைபெற்றதை எண்ணிப் பாருங்கள். விடியா திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. திமுக ஆட்சியாளர்களுடைய அவலங்களில் ஒருசிலவற்றை, வாக்காளப் பெருமக்களாகிய உங்களுக்கு சுட்டிக் காட்டுவது எனது கடமை எனக் கருதுகிறேன்.  2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகள் உள்ளிட்ட, 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து, கவர்ச்சியாகப் பேசி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக இன்றுவரையிலும், பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அந்தர்பல்டி அடித்து, திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொண்டும்; விளம்பரங்களின் மூலமும் மக்களை ஏமாற்றி வருகிறது.   விடியா ஆட்சியில், மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகள், மளிகைப் பொருட்கள், அரிசி உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.  மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு வரி உயர்வு, குப்பைக்கு வரி, அரசின் அனைத்து கட்டணங்களையும் பலமடங்கு உயர்த்தி உயர்த்தியது விடியா திமுக அரசு  கட்டுமானப் பொருட்கள் விலை பலமடங்கு உயர்ந்ததால், ஏழை எளிய நடுத்தர மக்களின் சொந்த வீடு என்ற குறிக்கோள், கனவாகவே மாறியது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், தனியாக வசிக்கும் முதியவர்களை குறி வைத்து தாக்குதல், வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. புதிதாக வெடிகுண்டு கலாச்சாரமும் தமிழகத்தில் பரவியுள்ளது. ஆளும் கட்சியினரின் அராஜகங்கள் உள்ளிட்ட அனைத்தையும், விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் கண்டும் காணாமல் இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.  விடியா திமுக ஆட்சியில், தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறியுள்ளது. இளைஞர்களையும், மாணவர்களையும் போதைக்கு அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு தமிழகத்திற்கு சர்வதேச அளவில் தலைகுனிவையும் ஏற்படுத்தி உள்ளனர் திமுக நிர்வாகிகள்.  விடியா திமுக அரசின் அமைச்சர்கள், வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை பல்வேறு வகைகளில் அச்சுறுத்தியும், கொச்சைப்படுத்தியும் பேசி வருவது அராஜகத்தின் உச்சம்.  முதலமைச்சரின் மகனும், மருமகனும், சுமார் 30 ஆயிரம் கோடிக்கு மேல் ஒரே ஆண்டில் முறைகேடாக சேர்த்திருக்கிறார்கள் என்று முன்னாள் நிதி அமைச்சர், தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேசிய ஆடியோ பதிவிற்கு முதலமைச்சர் இதுவரை எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.  விடியா திமுக ஆட்சியில், பல்வேறு துறைகளில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. தங்களது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஊழல் செய்த பணத்தை சினிமா துறை மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.  விடியா திமுக ஆட்சியில், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காவு கொடுத்து வருவது. இரண்டுமுறை மின் கட்டண உயர்வு, நூல் விலை கடுமையாக உயர்வு, பீக் அவர் கட்டணம் என்று பல்வேறு சுமைகளை தொழில்துறையில் சுமத்தியதன் காரணமாக இன்று தமிழகத்தின் தொழில்துறை அதாள பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.  எங்களது ஆட்சியில் மக்கள் நலனை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்தது. பல திட்டங்களை நிறுத்தியது, பல திட்டங்களை ஆமை வேகத்தில் செய்கிறது இந்த விடியா திமுக அரசு.  மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, அவர்கள் ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் சிறப்பு திட்டங்கள் எதையும் 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை முழுமையாக வழங்குவதில்லை. இயற்கை சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை வழங்காதது மட்டுமின்றி, மத்தியக் குழுவை காலங்கடந்து அனுப்புதல். தமிழகத்திற்கு சேர வேண்டிய இந்த நிதியை பெற வக்கில்லாத அரசாக விடியா திமுக அரசு உள்ளது.  2014-ல் பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமையும்போது, பெட்ரோல் 1 லிட்டர் விலை ரூ. 71/-. டீசல் 1 லிட்டர் விலை ரூ. 55/-. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 105 டாலர். 2024-ஆம் ஆண்டு பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 102/-. டீசல் ஒரு லிட்டர் விலை ரூ. 94/-. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 86 டாலர். 2014-ல் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை அதிகமாக இருக்கும் போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவாக இருந்தது. இதுவே 2024, பா.ஜ.க-வின் ஆட்சியில் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் பேரல் விலை குறைவாக இருக்கும் போது, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் அரசு அதிகளவில் மேல்வரி விதித்ததுதான். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் விடியா திமுக அரசு 2021-ல் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்தது. விற்பனை வரியைக் குறைத்து விலையைக் குறைத்திருக்காலாம். ஆனால், அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 2024 தேர்தல் அறிக்கையிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், தமிழக மக்கள் இதனை நம்பத் தயாராக இல்லை.  எங்களது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து, அனைத்துத் தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து கேட்டறிந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் நிறைவேற்ற முடிகின்ற வாக்குறுதிகளை நாங்கள் 2024, நாடாளுமன்றத் தேர்தலில் அறிவித்திருக்கிறோம். உதாரணமாக, ஏழை குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 3,000/- ஊக்கத் தொகை, சொந்த வீடு இல்லாமல் அவதியுறும் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா குடியிருப்பு வழங்கும் திட்டம், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மாத அடிப்படையில் ழுளுகூ வரி தாக்கல் செய்யவும், அதற்கு காலாண்டு அடிப்படையில் ழுளுகூ கட்டணத்தைச் செலுத்துதல், போன்ற பல வாக்குறுதிகளை அறிவித்துள்ளோம். எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவார்கள். தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஏராளம், ஏராளம். பெண் கல்வி வளர்ச்சி, வறுமை ஒழிப்பின் முதல்படி. ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகப் போற்றப்படுவது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படையான கொள்கை. பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை; பெண்கள் படிப்பதற்கென்று தனிப்பட்ட சலுகைகள்; படித்த பெண்களுக்கு ரொக்கமாகவும், தங்கமாகவும் உதவித் தொகை; பெண்களுக்கு உதவ வீட்டு உபயோக மின்சார சாதனங்கள்; பெண்களுக்கு பெரிதும் பயன்பட்ட அம்மா உணவகங்கள் போன்ற புரட்சிகரமான திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுக்கு கொள்கை விளக்கக் குறிப்புகளை தங்கள் நாடாளுமன்ற செயல்பாடுகள் மூலம் எடுத்துரைப்பார்கள். சூறாவளியாக இரவு, பகல் பாராமல் தேர்தல் பணிகளை மேற்கொண்டிருக்கும் கழக உடன்பிறப்புகளும், தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் வாக்குச் சாவடிக்கு வரும் பொதுமக்களிடம் பண்போடும், பாசத்தோடும் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக் கோர வேண்டும். மேலும், நம் முகவர்கள் வாக்குப் பதிவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அதே போல், வாக்குப் பதிவு நாளன்று வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அன்று காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு செய்திடல் வேண்டும். வாக்குப் பதிவு நிறைவுபெற்று அதனை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருந்திடல் வேண்டும். எனதருமை வாக்காளப் பெருமக்களே, 19.04.2024 அன்று நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வெற்றிச் சின்னமாம்இரட்டை இலை’’ சின்னத்திலும்; தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முரசு’’ சின்னத்திலும்; விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு இரட்டை இலை’’ சின்னத்திலும், உங்களது பொன்னான வாக்குகளை அளித்து, வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றிபெறச் செய்து, புதிய வரலாற்றுச் சாதனையை படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தன்னலமற்ற உழைப்பை
ஊர் பேசட்டும்; நாம் செய்த நன்மைகளை நாடு பேசட்டும்; வெற்றிச் செய்தி எட்டுத்திக்கும் முழங்கட்டும்; தமிழக மக்களின் வாழ்வு செழிக்கட்டும். என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

அதிமுக வேட்பாளர்களுக்கு எடப்பாடி வேண்டுகோள் : நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400