நமக்கு உலகில் இல்லாதது என்பது ஏதாவது இருந்ததா?. இல்லை!
ஆனால் இன்று இருக்கிறது என சொல்வதற்கு ஏதாவது ஒன்று இருக்கிறதா?. கொஞ்சம் சொல்லுங்கள்..
தமிழர் நமக்கென அரசு ஆட்சிகள் இருந்தன.. நமக்கென வாழும் நாடுகள் இருந்தன.. தமிழை வளர்க்க சங்கங்கள் இருந்தன.நமக்கென பண்பாடுகள் இருந்தன.. நமக்கென வாழ்வியல் முறைகள் இருந்தன, வேளாண்மை இருந்தது, தொழில்கள் இருந்தன ,ஆடை அணி மணிகள் இருந்தன.. நாளும் பொழுதும் கணிப்புகள் இருந்தன, கணக்கு வழக்குகள் இருந்தன, பஞ்சாங்கம் இருந்தது.நாள் காட்டிகள் வெளிவந்தன. வாய்ப்பாடுகள் இருந்தன, ஆண்டு மாதங்கள் சூரியன் வரவு செலவுகள் என்ற குறிப்புகள் இருந்தன. அதற்கான படிப்புகள் இருந்தன. நல்ல நல்ல பழக்க வழக்கங்கள் இருந்தன.
இப்பொழுது மக்களாட்சி என்ற பற்றால்.. பலவிதமான மூடத்தனங்களே வளர்ந்து வெற்றுத்தன புகழ்ச்சிகள் கொண்டாட.. அதனில் அனைத்துமே மறைந்து போய்க் கொண்டிருக்கின்றன..
வாழ்க்கை அமைப்புகள் இருந்தன. தொழில்கள் பல இருந்தன. மக்கள் வாழும் குடிகளாக இருந்தனர். மானம் அவமானங்கள் இருந்தன. அதற்கு ஒரு கேடென்றால்.. உயிரை துறப்பாரும் இருந்தனர். காதல் இருந்தது. கற்பு நெறி பழக்க வழக்கங்கள் இருந்தன. வீரம் இருந்தது. வெறுமை தனங்கள் இல்லாமல் இருந்தது.
பொருள் சேர்ப்பும் வைப்பும் கொடுப்பும் துறப்பும் இருந்தது. வறியார்க்கு வழங்கி மகிழும் தன்மைகள் இருந்தன. விருந்தும் இருந்தது. நோன்பும் இருந்தது. நோவாத் தன்மைகள் வழக்கம் இருந்தது.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்று இதில் ஏதாவது ஒன்றாவது நமக்கென இன்று இனிக்க இருக்கின்றதா.. என தேடிப் போனால்.. எதுவுமே இல்லையென சொல்லி விடலாம்.
அப்படி இல்லை என்பதைவிட.. இன்று எல்லாமே இங்கு வந்தனவே! வந்தவர்கள் கொண்டு தந்தனவே.. வாழ்கின்றன.
அப்போ.. இப்போ நாம் படிக்கும் படிப்பும் பாடமும் நமதல்ல. பேசும் மொழியும் கல்வியும் மொழியும் நமதல்ல. நாம் ஆடும் ஆட்டமும் கலையும் கூட நமதல்ல. இசைக்கும் இசையும் கருவிகள் கூட நமதல்ல.
அப்போ.. இருந்தது எல்லாம் இப்போ.. அம்போ…
நமக்கு நிலத்திற்கு ஏற்ற மருத்துவம் சித்த மருத்துவம். இலையும் தழையும் புல்லும் பூண்டும் மண்ணும் மலரும் காயும் கனியும் விதையும் உண்ணும் உணவும் குடிக்கும் நீரும் பாணகமும் அல்லவா.. இயற்கை வீட்டு மருத்துவம்.
இன்று இவற்றிகு எல்லாம் என்று ஏதாவது படிப்பு உண்டா? பாடம் உண்டா? கல்விக்கூடம் உண்டா? கல்லூரிகள் பள்ளிக் கூடங்கள் உண்டா? பல்கலைக் கழகங்கள் உண்டா? அந்த கலைகளில் தேறிய பெருமக்களுக்கு ஏதாவது சிறப்பு செயல்களை அரசுகள் எடுத்து பூசுவது உண்டா? வேலை கொடுப்பதும் உண்டா?
சனிக் கோளை ஆராய்வதற்காக ஒரு செயற்கை கோளை நாசா விஞ்ஞானிகள் அனுப்புகிறார்கள். அதில் சில உலக மொழிகளை பேச வைத்து அனுப்பி வைக்கிறது அந்த நாட்டு அரசு. அதில் முதல் மொழியாக நம் தமிழை வைத்து பேச வைத்து அனுப்பி வைக்கிறது அமெரிக்கா.
உலகில் மூத்த மொழி தமிழ், அது செம்மொழி என்ற அங்கீகாரத்தை உலக நாடுகள் ஏற்று சிறப்பிக்கின்றன.
ஒரு ஆவணத்தை இந்த உலகம் ஒருவேளை அழிந்து போனால்.. அடுத்து வரும் புதிய மனித இனம் படித்து அறிந்து கொள்ள ஒரு வைப்பு பெட்டகத்தை புதைக்கும் போது நம் தமிழ் நூலையும் வைத்து படைத்துள்ளது இங்கிலாந்து.
இதற்கெல்லாம் நன்றி தெரிவித்தல் சொல்வது போல் தமிழை வளர்க்க முனையாது தமிழர் தன் பண்பாட்டு வளங்களை நினைப்பில் கொள்ளாது உழலும் பற்றற்ற தன்மையை என்னென்று சொல்லுவது?
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இப்படியே போனால்.. இருக்கும் நலங்கள் வளங்கள் நிலைக்குமா?நன்மை நலங்கள் பற்றிட நிலைத்திட இப்பொழுதே கேட்டு சிந்திப்பீர்!
வணக்கம்.
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழர் தன் உரிமைக் கட்சி






