
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதுஒழிப்பு போராளி காந்தியவாதி சசிபெருமாள். இவர் 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு கோரி போராடியவர். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியவர்.
கடந்த 2014ஆம் ஆண்டில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முழு மதுவிலக்கு கோரி 36 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே தமிழ்நாடு & கேரள எல்லை அருகே உண்ணாமலைக் கடை என்ற ஊரில் கல்வி நிறுவனங்களுக்கும், வழிபாட்டுத்தலங்களுக்கும் அருகிலுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி 100 அடி உயர செல்போன் கோபுரஉச்சிமீது ஏறி போராடிய போது உயிரிழந்தார்.
ஆண்டுதோறும் இவருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 11ம் ஆண்டு நினைவு வீரவணக்கநாள் 31ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
அதன்படி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காந்தியவாதி சசிபெருமாள் ஆதரவு மதுஒழிப்பு போராளிகள் வீ.சுந்தர் ஒருங்கிணைப்பில் மதுஒழிப்பு போராளி சசிபெருமாள் 11- ம் ஆண்டு வீரவணக்கம் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏவும் கொங்குநாடு இளைஞர் பேரவை தலைவருமான தனியரசு, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் அமைப்பு தலைவர் சேம. நாராயணன், அமைப்புச்சாரா தொழிலாளர் அமைப்பு தலைவர் கீதா, தமிழ்நாடு சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் தஞ்சை இளஞ்சிங்கம், காந்திய இயக்கம் சிவஞானம் சம்பந்தம், மனிதநேய ஜனநாயக கட்சி துணைச் செயலாளர் அஸாரூதின், சமுகநிதி மக்கள் இயக்க தலைவர் சைதை அம்பேத்கார்தாசன், தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, தமிழக முற்போக்கு கட்சி தலைவர் சக்திவேல், வழக்கறிஞர்கள் சிதம்பரம், சிவக்குமார், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை தலைவர் பாலு, பெண்ணுரிமை இயக்கத்தினர், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்றனர்.







