சென்னை:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பட்டாசு குடோன் தீ விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். தீ விபத்தில் காயமடைந்த சிவலிங்கம் என்பவருக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.‘
தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி உள்வட்டம், சிகரலஅள்ளி தரப்பு, நாகதாசம்பட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் நாகதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவேரி மனைவி முனியம்மாள் (வயது 65) மற்றும் சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த பெ.பூபதி மனைவி பழனிம்மாள் ( 50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் மூலம் அறிந்தேன்.
மேலும், இவ்விபத்தில் கடுமையான காயமடைந்து பென்னாகரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவலிங்கத்துக்கு (52) சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிவலிங்கத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.







