பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இன்னர் வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ்
இணைந்து ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று 26.06.2023
நடைபெற்ற சென்னை பள்ளிகளில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை (Career Guidance Programme) மேயர் ஆர். பிரியா தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருக்கு உயர்கல்விக்கான வழிகாட்டி புத்தகத்தினை வழங்கி
உரையாற்றினார். மேயர் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை
அறிக்கை அறிவிப்பு எண்.24ன் படி, 2023-24ஆம் கல்வியாண்டில் சென்னை
பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிப்
படிப்பிற்கு பின் அவர்களின் எதிர்கால கல்வி மற்றும் வேலை வாய்ப்பினை பற்றி
அறிந்து முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு வழிகாட்டும் விதமாக, தொடர்புடைய
துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களின்
வாயிலாக வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance Programme) நடத்தப்படும்
எனஅறிவிக்கப்பட்டது.

மேயர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, 2023-
24ஆம் கல்வியாண்டில் சென்னை பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ,
மாணவியருக்கு பள்ளிப் படிப்பிற்கு பின் அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும்
வேலை வாய்ப்பினை பற்றி அறிந்து முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு
வழிகாட்டும் விதமாக, சாம்ஸ்கிரியா பவுண்டேஷன் (Samskriya Foundation) மூலம்
வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance Programme) 26.06.2023 மற்றும்
27.06.2023 ஆகிய இரண்டு நாட்களுக்கு மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி
வரை ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேரடி நிகழ்ச்சியாகவும்
(Offline Programme), செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கம் மற்றும் தியாகராய
நகரில் உள்ள சர். பிட்டி தியாகராயர் அரங்கத்திலும் ஆன்லைன் நிகழ்ச்சியாகவும்
(Online Programme) இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மேயர் பேசும்போது தெரிவித்ததாவது : வழிகாட்டுதல் நிகழ்ச்சி என்பது மாண்புமிகு மேயர் அறிவிப்பில் இருந்த ஒன்று. இது மாணவ, மாணவியருக்கு மிகவும் முக்கியமானது. 12ஆம் வகுப்பிற்கு பிறகு தான் எந்த கல்லூரியில் என்ன பாடப்பிரிவு எடுப்பது என்றும், அது எதிர்காலத்திற்கு எவ்வளவு பயனுள்ளது என்பதை தீர்மானித்து முடிவெடுக்க முடியும். ஒரு சில மாணவர்களுக்கு உயர்கல்வியில் என்னென்ன பாடப்பிரிவு இருக்கிறது என்றும், அதில் எவற்றை எடுக்க வேண்டும் என்று கூட தெரியாத நிலை உள்ளது. ஒரு சில மாணவர்கள் பொது வணிகவியல் பாடப்பிரிவு தான் எடுப்போம் என்று இருப்பார்கள். பொது வணிகவியலைத் தாண்டி பி.பி.ஏ., பி.ஏ., வரலாறு போன்ற பல பாடப்பிரிவுகள் உள்ளன. இன்று வந்துள்ள அனைத்து மாணவர்களும் உயிரியல் பாடப்பிரிவை சார்ந்த மாணவர்கள். உயிரியல் பாடப்பிரிவு என்று எடுத்துக் கொண்டால் அனைத்து மாணவர்களும் எம்.பி.பி.எஸ்., தான் படிப்பேன் என்றும், இல்லையென்றால் படிக்க மாட்டேன் என்றும் சில மாணவர்கள் உள்ளார்கள்.
ஆணையாளர் அவர்கள் தெரிவித்தபடி, எந்த துறை சார்ந்த பாடப்பிரிவு
எடுக்கிறீர்களோ, அந்தத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பது மிகவும்
முக்கியம். உயிரியல் பாடப்பிரிவில் பயின்று மருத்துவராக வேண்டும் என்கின்ற
மாணவர்கள் ஆரம்பத்தில் இருந்து கடின உழைப்புடன் தங்களுடைய பாடத்தில்
கவனமாக படிக்க வேண்டும். மேலும், பொழுதுபோக்கு, தூக்கம் ஆகியவற்றை
கட்டுப்படுத்தி படிக்க வேண்டும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு தனித்துவத்தை காட்டுவது கல்வி மட்டுமே.
பெண்களுக்கு கல்வி மிகவும் முக்கியம். பெற்றோர்களும் நீங்கள் நன்றாக படிக்க
வேண்டும் என்றும், நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று தான் கடினமாக
உழைக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
எம்.பி.பி.எஸ். என்பதைத் தாண்டி, பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி,
பார்மசிஸ்ட் போன்ற நிறைய பாடப் பிரிவு உள்ளது. இவற்றில் எது முக்கியம்,
உங்களுக்கு எந்தப் பாடப்பிரிவு பிடிக்கும் என்ற ஒரு தெளிவு கொடுப்பதற்காகவே
இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்கு ஏதாவது கேள்விகள் கேட்க வேண்டும் என்றாலோ, மனதில்
ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலோ வெளிப்படையாக பேச வேண்டும். இதற்கு முன்பு
படித்த மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள்
அமையவில்லை. உங்களுக்கு இந்த வாய்ப்பு அமைந்துள்ளது. நீங்கள் எதிர்காலத்தில்
என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
மேலும், இந்த வழிகாட்டுதல் தொடர்பாக ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்தப் புத்தகத்தை படித்து உங்களுக்கு தேவையான துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உயர்கல்வியில் கல்லூரியைத் தாண்டி பாடப்பிரிவு என்பது தான் மிகவும் முக்கியம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் இதற்கு மேல் ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவு படிக்க வேண்டும் என்று ஒரு மனநிலையில் இருப்பார்கள். அவர்கள் விரும்பும் கல்லூரியில் தான் படிப்பேன் என்றும் இருப்பார்கள். அந்தக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றால் வேறு கல்லூரியில் வேறு பாடப்பிரிவு பயில்வார்கள். நீங்கள் உயர்கல்வி படித்து முடித்ததும், எந்தப் பாடப்பிரிவு படித்தீர்கள் என்று தான் கேட்பார்கள். எந்தக் கல்லூரியில் படித்தீர்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள். எனவே, பாடப்பிரிவு தான் மிகவும் முக்கியம். இதை மனதில் கொண்டு மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என மாண்புமிகு மேயர் அவர்கள் தெரிவித்தார். இன்று (26.06.2023) நடைபெற்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் 7 சென்னை பள்ளிகளைச் சார்ந்த 431 மாணவர்கள், செனாய் நகர் அம்மா அரங்கத்தில் 13 சென்னை பள்ளிகளைச் சார்ந்த 431 மாணவர்கள் மற்றும் தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கில் 9 சென்னை பள்ளிகளைச் சார்ந்த 324 மாணவர்கள் என மொத்தம் 1186 உயிரியல் பாடப் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இன்று 27.06.2023 நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ரிப்பன் கட்டட
வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் 456 மாணவர்கள், செனாய் நகர்
அம்மா அரங்கத்தில் 353 மாணவர்கள் என மொத்தம் 809 கணினி அறிவியல் பாடப்
பிரிவைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, இ.ஆ.ப., , நிலைக்குழுத் தலைவர் (கல்வி) .த.விசுவநாதன் கல்வி அலுவலர் (பொ) சாந்தி, இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் சந்தியா ஜெயச்சந்திரன், ஜவந்தி சிங்காரம், அரசி பொன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






