சென்னை:
மேககதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உட்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் இரு அணைகள் கட்டுவதற்கான முன்னேற்பாடு பணிகளை கர்நாடக மாநில மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அணைக்கு எதிராக தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று (ஜூலை 10) போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக அவரது தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சியில் இருந்து புறப்பட்டு, பல்லவன் விரைவு ரயிலில் நேற்று சென்னை எழும்பூர் வந்தனர். பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் டெல்லி செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அனைவரும் மெரினா கடற்கரைக்கு வந்தனர். அங்கு அண்ணா நினைவிடம் முன்பு அமர்ந்து, மேககதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.







