அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள், கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போது, தேர்தல் செய்தி வெளியிடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களையும், பத்திரிக்கையாளர் நடத்தை நெறிமுறைகள் 2022-ல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணம் செலுத்தி செய்திகள் வெளியிடுவது குறித்த விதிமுறைகளையும் பின்பற்றுமாறு இந்திய பத்திரிக்கையாளர் மன்றம் அச்சு ஊடகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
தேர்தலில் பங்கேற்றுள்ள கட்சிகளின் பிரச்சாரங்கள் குறித்த நியாயமான நடுநிலையான செய்திகளை ஊடகங்கள் வாக்காளர்களுக்கு தெரிவிப்பது அவசியமாகும். அதன் அடிப்படையில் ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை இந்திய பத்திரிக்கையாளர் மன்றம் விவரித்துள்ளது.
- அதன்படி, தேர்தல்கள், வேட்பாளர்கள் குறித்து நடுநிலையான செய்திகளை வெளியிடுவது பத்திரிக்கைத் துறையின் கடமை. தேர்தல்களின்போது முறையற்ற தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது அல்லது ஒரு வேட்பாளர், கட்சி, நிகழ்ச்சி குறித்து செய்தித்தாள்கள் செய்திகளை வெளியிடக்கூடாது. தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர் முன்வைக்கும் முக்கியமான கருத்துக்களை செய்தித்தாள்கள் தவிர்க்கக்கூடாது, அதேநேரத்தில் எதிர் வேட்பாளரை தாக்கி பேசும் செய்திகளை வெளியிடக்கூடாது.
- தேர்தல் விதிகளின்படி, மதம் அல்லது சாதி அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே மதம், இனம், சாதி, சமுதாயம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில், மக்களிடையே பகைமை அல்லது வெறுப்புணர்வை தூண்டக்கூடிய செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
- ஒரு வேட்பாளரின் வெற்றிவாய்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தனிப்பட்ட நன்னடத்தை, செயல்பாடு குறித்தோ அல்லது அவர் வேட்புமனு தாக்கல் செய்தல், திரும்பப் பெறுதல் தொடர்பாகவோ அல்லது விமர்சன ரீதியாக செய்திகளை வெளியிடக்கூடாது. வேட்பாளர் அல்லது கட்சிக்கு எதிராக சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுக்களை பத்திரிகைகள் வெளியிடக் கூடாது.
- வேட்பாளர் அல்லது கட்சியை முன்னிலைப்படுத்த பணமாகவோ அல்லது வேறு வகையில் அளிக்கப்படும் எவ்வித சலுகைகளையும் பத்திரிகைகள் ஏற்கக்கூடாது. எந்தவொரு வேட்பாளர் அல்லது கட்சி சார்பில் அளிக்கப்படும் விருந்தோம்பல் அல்லது பிற சலுகைகளை ஏற்கக்கூடாது.
- குறிப்பிட்ட வேட்பாளர் அல்லது கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டும் என பத்திரிகைகளிடம் எதிர்பார்க்கப்படுவதில்லை. அவ்வாறு ஈடுபட்டால், எதிர்த்தரப்பு வேட்பாளர் அல்லது கட்சி பதிலளிக்கும் உரிமையை வழங்க வேண்டும்
- அதிகாரத்தில் உள்ள ஒரு கட்சி அல்லது அரசின் சாதனைகள் குறித்த விளம்பரங்களை மக்களின் வரிப்பணத்தின் மூலம் பத்திரிக்கைகள் வெளியிடக்கூடாது.
- தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோர் வெளியிடும் அனைத்து வழிகாட்டுதல்கள், உத்தரவுகள், அறிவுறுத்தல்களை பத்திரிகைகள் அவசியம் கடைபிடிக்க வேண்டும். கட்டண செய்திகள் தொடர்பான விதிமுறைகளை அச்சு ஊடகங்கள் அவசியம் பின்பற்ற வேண்டும். தேர்தல் நேரங்களில் கட்டண செய்திகளை தவிர்க்கும் வகையில் அச்சு ஊடகங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை இந்திய பத்திரிகையாளர் மன்றம் வகுத்துள்ளது. இது பத்திரிக்கையாளர் நடத்தை விதிமுறைகள் 2022-ல் சேர்க்கப்பட்டுள்ளது.
- அதன்படி, எந்தவொரு கட்சித் தலைவரும் வெளியிடும் அறிக்கைகளை செய்தித்தாள்கள் தவறாக புரிந்துகொண்டோ அல்லது தவறாக மேற்கோள் காட்டவோ கூடாது. தலையங்கங்களில் சுட்டிக்காட்டப்படும் அறிக்கைகள் தலைவர்கள் உண்மையில் எதை கூறுகிறார்களோ, அந்த உண்மையான அம்சத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள், வாக்காளர்களின் பெயர்களை சாதி ரீதியான அடிப்படையில் குறிப்பிடும் செய்திக் கட்டுரைகள் அல்லது செய்திகள் வெளியிடப்படும் தன்மை ஆகியவை அச்செய்தி கட்டண செய்தி என்பதை உறுதிப்படுத்துகிறது.
- ஒரே மாதிரியான தகவல்களைக் கொண்ட அரசியல் செய்திகள் வெவ்வெறு செய்தித் தாள்களில் ஒரே தருணத்தில் வெளியாகி இருந்தால், அந்த செய்திகள் கட்டண செய்திகளாகும்.
- தேர்தல் நாட்களில் இரண்டு வெவ்வெறு செய்தித்தாள்கள் ஒரே செய்தியை சிறிதும் மாற்றமில்லாமல் வெளியிடுவது தற்செயலானது அல்ல. அச்செய்திகள் ஏதேனும் ஒரு பிரதிபலனை எதிர்பார்த்தே வெளியிடப்பட்டதாக தெளிவாகிறது.
- செய்தி அல்லது புகைப்படத்தை வெளியிடும் தன்மை குறிப்பாக, குறிப்பிட்ட ஒரு கட்சி அல்லது வேட்பாளருக்கு சாதகமான வகையில் இருப்பது, அக்கட்சிக்கு வாக்களிக்குமாறு உணர்த்துவது, அச்செய்தி கட்டண செய்தி என்பதையும் உணர்த்துகின்றன.
- வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று சுட்டிக்காட்டுவது கட்டணச் செய்தியாகும்.
- தேர்தல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தித்தாள்கள் வேட்பாளர்களின் அறிக்கை, நேர்காணலை வெளியிடும்போது சமநிலையை உறுதி செய்ய வேண்டும்.
- செய்தித்தாள்கள் வேட்பாளர்கள் அல்லது கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்த நேர்மையான தகவலை வெளியிட சுதந்திரம் பெற்றுள்ளன. அதற்காக பணம் கொடுக்கப்பட்டது என்பது உறுதியாகாதவரை அது கட்டண செய்தியாகாது.
- எந்தவொரு கட்சியின் வெற்றியை கணிக்கக்கூடிய செய்தியையும் சரிபார்க்காமல் செய்தித்தாள்கள் வெளியிடக்கூடாது.
- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் நற்பண்புகளை குறிப்பிடுவது, வாக்காளர்களை திசைதிருப்பி அளிக்கப்படும் கட்டணச் செய்தியாகும்.
- வேட்பாளரின் எதிர்மறையான அம்சத்தையும் மற்றொரு வேட்பாளரின் நேர்மறையான அம்சத்தையும் ஆதாரமின்றி செய்தி வெளியிடுவது கட்டணச் செய்தியாகும்.







