அகத்திக்கீரையை உண்பதால் குடல்புண், அரிப்பு மற்றும் சொறி சிரங்கு முதலிய தோல் நோய்கள் குணமாகும். அகத்திக் கீரையைப் பச்சையாக மென்று, சாற்றை விழுங்கினால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி நீங்கும். இரத்தப் பித்தம் மற்றும் இரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதால் அகலும். அகத்திக்கீரையை சாறாக செய்தும் பருகலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்
- அகத்திக்கீரை – 1 கட்டு
- பெரிய வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – 2
- சீரகம் – 1 டீஸ்பூன்
- தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
- நல்லெண்ணெய்- 1 டீஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- உப்பு – 1/2 டீஸ்பூன்
செய்முறை
- கீரையை காம்பிலிருந்து உருவிக் கொள்ளவும்.
- வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சற்று வதக்கவும். அத்துடன் கீரையை அலசிப் போட்டு, சீரகம், உப்பு சேர்க்கவும். அதில் ஒரு கப் தண்ணீரையும் சேர்த்து மூடி போட்டு, சிறு தீயில் வேக விடவும்.
- தேங்காயை நன்றாக அரைத்து வெந்தக் கீரையில் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
- சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சாறை வடிகட்டி சூப் போலவும் குடிக்கலாம்.
- இந்தச் சாறை வெறும் தண்ணீருக்குப் பதில், அரிசி கழுவிய நீரில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணம் நிறைந்த இதனை செய்து பருகி வளம் பெறுங்கள்.






