அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், 2016 சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றிபெற்றது செல்லும் என அறிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜன் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பணபட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் பாண்டியராஜன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் 2016ஆம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் இரண்டு நாட்கள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தரப்பில் குறுக்குவிசாரணை செய்யப்பட்டது. அப்போது பாண்டியராஜன், அதிமுக அட்டைபடம் போட்ட தேர்தல் வாக்குறுதி நோட்டீஸ்களில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்து வாக்காளர்களுக்கு கொடுக்க முயற்சித்தபோது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது குறித்து நேரில் ஆஜராகும்படி தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டும் முற்றிலும் தவறு எனவும், தனக்கு எந்தவொரு சம்மனும் வரவில்லை என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கபட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆர்.சுப்ரமணியன், குற்றச்சாட்டுகளை போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை என கூறி ஆவடி நாசர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன், முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பெற்ற வெற்றி செல்லும் என உத்தரவிட்டுள்ளார்.







