‘போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய பொதுமக்களிடையே விழிப்புணர்வு அவசியம்: ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்
i

அரசின் நலத்திட்டங்களை பயனாளிகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு எம் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கிற்கு தலைமை வகித்து அவர் உரையாற்றினார். அப்போது, ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்கள், நிர்வாகத்தில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கி வருவதாகப் அவர் பாராட்டினார். மாவட்ட நிர்வாகத்தின் பல முயற்சிகள் ஊடகங்களின் ஆதரவால் வலுவடைந்துள்ளதாகக் கூறினார். இத்தகைய பயிற்சிகள் பத்திரிகையாளர்களின் அறிவையும் தொழிற்திறனையும் மேம்படுத்த உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடக நெறிகளை கடைபிடித்தல், அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், டிஜிட்டல் யுகத்தில் போலிச் செய்திகளைத் திறம்பட எதிர்கொள்வது குறித்து ஊடகவியலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இப்பயிலரங்கு நடத்தப்பட்டது.

இப்பயிலரங்கில் சிறப்புரையாற்றிய ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு ஜி.சந்தீஷ், காவல்துறை, அரசு திட்டங்கள் தொடர்பான துல்லியமானத் தகவல்கள் மக்களைச் சென்றடைவதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்றார். போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடையப் பொதுமக்கள், குறிப்பாகப் பெற்றோர்கள், இளைஞர்களிடையே விழிப்புணர்வு அவசியம் என வலியுறுத்தினார்.
பயிலரங்கில் முதன்மை உரையாற்றிய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் (பொறுப்பு) திரு வி.பழனிச்சாமி, ஊடக செய்திகளில் துல்லியம், சுருக்கம், தெளிவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் போலிச் செய்திகள், தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி ஆகிய இரண்டு சவால்களையும் ஊடகங்கள் எதிர்கொண்டு வருவதாகக் கூறிய அவர், தொழில்முறை அறநெறிகளைப் பின்பற்றிச் செயல்பட வேண்டுமென ஊடகவியலாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
நிலையான மீன்பிடி தொழில் குறித்த அமர்வில், மண்டபம் மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் விகாஸ், கடற்பாசி வளர்ப்பு, கூண்டு மீன் வளர்ப்பின் சாத்தியக்கூறுகளை விளக்கிப் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் அம்சங்களை எடுத்துரைத்தார்.

மை பாரத் அமைப்பின் மாவட்ட இளைஞர் அலுவலர் திரு மேனுவல் பெர்லி, சமூகத்தில் தலைமைப் பண்பை வளர்ப்பதில் ‘மை பாரத்’ அமைப்பின் பங்கு குறித்த அமர்வில் உரையாற்றினார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் 114 இளைஞர் மன்றங்களும் ‘மை பாரத்’ இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிறப்பு அமர்வில் பேசிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் திரு பி அருண் குமார், தவறான, போலியான செய்திகளைக் கண்டறிவது குறித்து எடுத்துரைத்தார். டிஜிட்டல் தகவல்களைச் சரிபார்க்கும் நடைமுறைகள், உண்மை சரிபார்ப்பு முறைகளைப் பயன்படுத்துவது குறித்து அவர் விளக்கினார். இப்பயிலரங்கில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.







