சென்னை:
நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் ஆட்டங்கள் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 15&-13 புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் பேபியானோ கருனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் கிளாசிக்கல் பிரிவில் முதல் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார். அடுத்த ஆட்டத்தை டிரா செய்தார். இதனால் கிளாசிக்கல் சுற்றின் முடிவில் 3-&9 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் பின்தங்கினார். இதையடுத்து இருவரும் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவில் பலப்பரீட்சை மேற்கொண்டனர்.
கிளாசிக்கல் பிரிவில் பின்தங்கிய நிலையில் கருனாவை விட 6 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் ரேப்பிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவில் விளையாடினார். இதில் ரேப்பிட் பிரிவில் இரண்டு ஆட்டங்களையும் பிரக்ஞானந்தா வென்றார். தொடர்ந்து நடைபெற்ற பிளிட்ஸ் பிரிவின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறும் வாய்ப்பை நழுவ விட்டார் பிரக்ஞானந்தா, இறுதியில் 15-&13 என்ற புள்ளிகள் கணக்கில் கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்றார்.
கிராண்ட் செஸ் டூர் பட்டம் வென்ற முதல் இந்திய என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவருக்கு இரண்டு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது. இதில் கருனா இரண்டாம் இடமும், வெஸ்லி மூன்றாம் இடமும் பிடித்தனர்.
தமிழக முதல்வர் வாழ்த்து

பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழகத்தின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மன உறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க பிரக்ஞானந்தாவை மனமார வாழ்த்துகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.







