தேர்தலில் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவது, வாக்குச்சாவடிகளில் முறைகேடுகளைக் கண்டறிவது, தேவைப்பட்டால் மறுவாக்கெடுப்புக்குப் பரிந்துரைப்பது, படிவம் 17ஏ (வாக்காளர் பதிவேடு), பிற ஆவணங்கள் மற்றும் இதர பதிவேடுகளைத் தேர்தலுக்குப் பின் பரிசோதிப்பது குறித்த ஒருங்கிணைந்த அறிவுறுத்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம்,வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாமில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து 296 சட்டமன்றத் தொகுதிகளிலும், கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுராவில் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற 4 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 296 தேர்தல் அதிகாரிகள், 296 பார்வையாளர்கள் முன்னிலையில், ஆவணங்களின் பரிசீலனை இன்று சுமுகமாக நடத்தப்பட்டது.
பரிசீலனைச் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக, 1,899 வேட்பாளர்கள் அனைவருக்கும் பரிசீலனையின் தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. பரிசீலனைக்குப் பிறகு, நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற 63,084 வாக்குச்சாவடிகளில், ஒரே ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்பட்டது.
இதன்படி, அசாமின் கரீம்கஞ்ச் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள பேபிலேண்ட் உயர் ஆங்கிலப் பள்ளி வாக்குச்சாவடிக்கு மறுவாக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மறுவாக்குப்பதிவு 2026, ஏப்ரல் 11 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. முழு செயல்பாடும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, ஆய்வுக்குப் பிறகு, படிவம் 17ஏ மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் தேர்தல் அதிகாரியின் முத்திரையுடன் மீண்டும் சீல் வைக்கப்பட்டன.





