தமிழ்த்தேசியப் பேரியக்கம்

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் – 2026 இல் பாடம் கற்க வேண்டியவர்கள் கட்சிக்காரர்கள் அல்லர். வாக்காளப் பெருமக்களே – மக்களே!

வென்றவர்கள் – தோற்றவர்கள் இரு தரப்பிலும் சமூக இலட்சியம் எதையும் முன்வைத்து மக்களிடம் பரப்புரை செய்யவில்லை. இதில் விதிவிலக்கு நாம் தமிழர் கட்சி! அது தமிழ்த்தேசியம் என்ற இலட்சியத்தை முன்வைத்து அதன் சார்பான கொள்கைகளை முன்னிறுத்திப் பரப்புரை செய்தது. ஆனால், அந்த நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குகளை விடச் சற்றொப்ப சரிபாதி அளவு குறைவாக வாக்களித்துள்ளனர்.

தி.மு.க. வென்ற தொகுதிகள் 59. அ.தி.மு.க. வென்ற தொகுதிகள் 47. தமிழ்நாட்டின் சட்டப் பேரவையின் மொத்த தொகுதிகள் 234.

1967 க்குப் பிறகு, தி.மு.க. அல்லது அ.தி.மு.க. இரண்டில் ஒன்றுதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றிருந்த நிலை மாறியது. புதிதாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகள் வென்று தனிப்பெரும் கட்சியாக – தன் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. விஜய் முதலமைச்சராகி உள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் நின்று 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது காங்கிரசு. அ.தி.மு.க. கூட்டணியில் நின்று ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது பா.ச.க.

இவையல்ல தேர்தல் கட்சிகளின் இலட்சியங்கள்!

வென்ற த.வெ.க. வோ, அல்லது தோற்ற தி.மு.க. – அ.தி.மு.க. வோ அல்லது அவற்றின் தலைமையிலான கூட்டணி சார்பிலோ, தமிழ்நாட்டு மக்களிடம் முதன்மையாக முன்வைத்துப் பரப்புரை செய்து வாக்கு கேட்ட இலட்சியம் அல்லது உரிமைக் கோரிக்கைகள் யாவை?

  1. தமிழ்நாட்டுக்குத் தன்னாட்சி (மாநில சுயாட்சி) மீட்பா? உலகில் வேறெந்தக் கூட்டாட்சியிலும் கூட்டாட்சி ஒன்றிய அரசால் அமர்த்தப்படும் ஆளுநர் பதவி இல்லை. அதுபோல, தமிழ்நாட்டிற்கு ஆளுநர் பதவி கூடாது என்று இக்கட்சிகள் கோரியதுண்டா?
  2. மாநில அரசு அதிகாரத்தில் இருந்து வந்த கல்வி, பொதுநலம் ஆகியவற்றை இந்திய அரசின் மேலாதிக்கம் உள்ள பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை நீக்கு! இவற்றை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவா என்று கேட்டதுண்டா?
  3. படித்த பிள்ளைகள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த ஓராண்டுக்குள் வேலை வாய்ப்பளிக்க வேண்டும். அப்படி வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாழ்வூதியம் வழக்கப்படும் என்று அறிவித்தார்களா? (இன்றியமையா உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றுக்குரிய தொகையை வாழ்வூதியமாக வழங்கும் திட்டம் செர்மனி போன்ற மேலை நாடுகளில் செயல்படுகிறது. தமிழ்நாட்டிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.)
  4. தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களுக்கு குடி நீராகவும் 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் மக்களுக்கு வாழ்வளிக்கும் காவிரி நீர் உரிமையை மீட்கவும், நடுநிலை தவறி தமிழ்நாட்டை வஞ்சித்து கர்நாடகத்தின் அராஜகங்களுக்குத் துணை போய்க்கொண்டு – மேக்கேதாட்டு அணை கட்டுவதற்குச் சாதகமாகச் செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தரை அப்பதவியிலிருந்து நீக்கி, நடுநிலையான அதிகாரியை அதில் பணியமர்த்த வேண்டும் என்று மேற்கண்ட கட்சிகள் கோரினவா?

“மேக்கே தாட்டு அணை கட்டுவதைத் தடுப்போம்” என்ற முழக்கம் மேற்கண்ட கட்சிகளால் தேர்தல் பரப்புரையில் முதன்மை இடம் பெற்றதா?

மேக்கே தாட்டு அணை கட்டியே தீருவோம் என்று தொடர்ந்து கொக்கரித்துவரும் கர்நாடகத் துணை முதலமைச்சர் (காங்கிரசுக் கட்சி) டி.கே. சிவகுமாரை அழைத்து வந்து தி.மு.க. – காங்கிரசு கூட்டணி தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் உட்பட தேர்தல் பரப்புரை செய்தது சரியா?

  1. டாஸ்மாக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டு, தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டதா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம் என்று உறுதி கூறப்பட்டதா?
  2. பள்ளிக் கூடத்திலிருந்து பல்கலைக் கழகங்கள் வரை அரசுத்துறை – தனியார் துறை இரண்டிலும் அடிமாட்டுச் சம்பளத்துக்கு அத்துக் கூலிகளாக பற்பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் – பேராசியர்கள் பணிகள் நிரந்தப்படுத்தப்பட்டு உரிய சம்பளம் உயர்த்தித் தரப்படும் என்ற ஒரு வாக்குறுதி உண்டா?
  3. தமிழ்நாடு அரசுத்துறை, உள்ளாட்சித் துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை – அரசு மருத்துவ மனைகள் அனைத்திலும் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் உடனடியாக நிரந்தரப்படுத்தப்பட்டு அவர்கட்கு உரிய சம்பளம் வழங்கப்படும் என்று ஒரு வாக்குறுதி உண்டா?
  4. உழவர்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, பருத்தி முதலியவற்றிற்கு சந்தை நிலவரப்படி இலாப விலை நிர்ணயித்துக் கொள்முதல் செய்வோம்; அரிசி. சர்க்கரை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளையும் உருவாக்குவோம் என்ற உறுதிமொழி உண்டா?
  5. தமிழ்நாட்டின் மண்ணின் மக்களாகிய சிறிய, நடுத்தர தொழில் உற்பத்தியாளர்கட்கு உற்பத்தி ஊக்கமும், ஏற்றுமதி ஊக்கமும் அளிக்கப்படும்; நிதிஉதவி உள்ளிட்ட உதவிகளும் சலுகைகளும் வழங்கப்படும் என்று கூறினார்களா?

தி.மு.க. விலிருந்து த.வெ.க. வரை எந்தக் கட்சியும் தமிழ்ச் சமூகத்திற்கான மேற்கண்ட உடனடி இலட்சியங்கள், கோரிக்கைகள், ஆகியவற்றை முதன்மைப்படுத்தி, உண்மையான அக்கறையுடன் பேசவில்லை.

அரசியல் என்பது முழுநேர நாடகம்!

மு.க. ஸ்டாலின் – எடப்பாடி பழனிச்சாமி – ஜோசப் விஜய் போன்ற தலைவர்கள் மக்களுக்காகப் போராடி மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டதுண்டா? இல்லை, இல்லை!

வல்லுநர்கள் வகுத்துக் கொடுத்த வாய் வீச்சுகள்…
திரைப்படத் தயாரிப்பு போலவே தேர்தல் தயாரிப்புகள்….
வறுமையை வளர்ப்பார்கள்; வறுமை நிவாரணம் வழங்கி “வள்ளல்கள்” ஆவார்கள்!
வறுமைப்பட்ட மக்களை மயக்கும் இலவசங்கள் பற்றிய அறிவிப்புகள்…
வாக்களிக்கக் கேட்டு, ஒரு வாக்குக்கு இவ்வளவு ரூபாய் என்று வீடுவீடாகச் சென்று இலஞ்சம் கொடுப்பது….
மக்களிடம் வரியாகச் சுரண்டிய பணத்தில் ஆட்சியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் தங்கள் சொந்தத் தேர்தல் விளம்பரங்களை அன்றாடம் நாளேடுகளில் ஊடகங்களில் வரச்செய்வது…..
அதிகாரத்தில் இருக்கும்போதும், அதை இழந்தபின்பும் ஊழல் நிதிவெள்ளம் வற்றாமல் பார்த்துக் கொள்வது…..

இவைதானே தி.மு.க. – அ.தி.மு.க. செயல்திட்டங்கள்!

தி.மு.க.வின் இன்னொரு பிறப்பு த.வெ.க.!

பகட்டு அதிகாரம் தனக்கும் வேண்டும் என்றுதானே ஜோசப் விஜய் கட்சி தொடங்கினார்! குட்டி அதிகாரம், பெட்டிபெட்டியாய்ப் பணம் இரண்டும் வேண்டும் என்றுதானே அக்கட்சியில் அ.தி.மு.க.வினர் சேர்கின்றனர்!

உழவர்கள் தங்களுக்கான வாழ்வுரிமைப் போராட்டங்களை, 1972 கருணாநிதி ஆட்சிக் காலத்திலிருந்து எம்ஜிஆர் ஆட்சி, செயலலிதா ஆட்சி வரை நடத்தினார்கள். 40 உழவர்கள் இம் முதல்வர்கள் ஆட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். உழவர்களின் உயிரீகங்களுக்கு – சிறைவாசங்களுக்குப் பிறகே வேளாண்மைக்கு மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு வந்தது.

உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலை செய்தது எடப்பாடி பழினிச்சாமி ஆட்சி! (22.5.2018). அதன் பிறகுதான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மக்கள் போராடித்தான் ஏறு தழுவல் (சல்லிக்கட்டு) என்ற தமிழர் மரபு வீர விளையாட்டை மீட்டனர். மக்களுக்கான இப்படிப்பட்ட போராட்டங்களில் சாதனைகளில் தேர்தல் கட்சிகள் எதற்கும் பங்குண்டா? இல்லை!

எடப்பாடி ஆட்சி நடத்திய ஸ்டெர்லைட் படுகொலைகளுக்குக் காரணமான அதிகாரிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப் போவதாக அடுத்து வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓய்வுபெற்ற நிதீபதி அருணா செகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார். அருணா செகதீசன் விசாரணை நடத்தி, தேவைப்படாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தி மக்கள் படுகொலைக்குக் காரணமாக இருந்த அதிகாரிகள் யார்யார் என்று குறிப்பிட்டு அறிக்கை கொடுத்தார். அந்தக் கொலைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தவர் மு.க. ஸ்டாலின்.

இப்பொழுதாவது புரிகிறதா? எடப்பாடி பழனிச்சாமியும் மு.க. ஸ்டாலினும் ஒன்றுதான்! தமிழர்களின் மற்றும் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காவு கொடுப்பவர்கள் – பன்னாட்டு மற்றும் வடநாட்டு முதலாளிகளின் கைக் கூலிகள்தான் இவர்கள்.

ஊழல் கொள்ளைக்காரர்கள் உள்ள திமுக – அதிமுக மேல்மட்டத் தலைவர்கள் – சென்னையிலிருந்து சிற்றூர்வரை உள்ள தங்கள் கட்சிக் காரர்களையும் ஊழல் புள்ளிகளாக ஊர்கள் தோறும் மாற்றி விட்டார்கள். தமிழ்ச்சமூகத்தையே மேலிருந்து கீழ்வரை ஊழல் புள்ளிகளின் கண்காணிப்பிற்குள் கொண்டு வந்துவிட்டன தி.மு.க. வும் அ.தி.மு.க. வும்! அதிமுக மற்றும் திமுக வில் உட்கசப்பு ஏற்பட்ட ஊழல் புள்ளிகளால் நிரப்பப்படுகிறது த.வெ.க.! இன்னொரு தி.மு.க. அல்லது அ.தி.மு.க. வாகத்தான் த.வெ.க. செயல்படும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன.

நேர்மையாளர்கள் ஆண்டாலும்….

நேர்மையாகச் செயல்பட்டாலும், தேர்தல் கட்சிகளுக்கு செயல்பாட்டு வரம்புகள் இருக்கின்றன. ஆளுங்கட்சியின் அரசுச் செயல்பாடுகள் ஆளுநர்களுக்குக் கட்டுப்பட்டவையாக இருக்கின்றன. மாநில அரசு அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களில் கூட ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் சட்டம் இயற்ற முடியாது. வரம்புக்குட்பட்ட மாநில அதிகாரங்களையும் அவ்வப்போது பறித்து இந்தியாவை முழுமையான ஒன்றிய ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வந்துவிட்டன காங்கிரசும் பாசகவும்.

இத்தகைய அரசியல் – சமூகச் சீரழிவுகளுக்கெல்லாம் தீர்வு தமிழ்த்தேசியம்தான். தேர்தல் அரசியலிலும், வரம்புக்குட்பட்ட அதிகாரத்திலும் தமிழ்த்தேசியம் ஆளட்டும். ஆனால், தமிழின இறையாண்மை மீட்பே தமிழர்களின் தாய்மொழி – தமிழினம் – தாயகம் மூன்றையும் முழு உரிமையுள்ளவையாக மாற்றும்! பதவி – பணம் -பகட்டு விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாமல், மொழி – இன – தாயக இறையாண்மை மீட்க தமிழர்கள் நடத்தும் மக்கள்போராட்டங்களே தீர்வு கொண்டுவரும். அப்போராட்டங்களில் ஈகங்கள் தேவைப்பட்டால் அவற்றையும் செய்ய வேண்டும்.

இந்திய ஆட்சியில் பா.ச.க. இருந்தாலும், காங்கிரசு இருந்தாலும் அவ்வாட்சி இந்தி – குசராத்தி மண்டல ஏகாதிபத்திய ஆட்சியாகத்தான் இருக்கும். இந்தி – குசராத்தி மண்டலங்களின் மக்கள் தொகைதான் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் மிகமிக அதிக பங்கு வகிக்கிறது. 1. உத்திரப்பிரதேசம் 2. உத்தரகாண்ட் 3. மத்தியப்பிரதேசம் 4. சத்தீசுகர் 5. பீகார் 6. ஜார்கண்ட 7. ராஜஸ்தான் 8. அரியானா 9. இமாச்சலப்பிரதேசம் ஆகியவற்றில் உத்திரப் பிரதேச மக்கள் தொகை மட்டும் 24.35 கோடி. பீகார் மக்கள் தொகை 13.3 கோடி மத்தியப் பிரதேசம் 8.7 கோடி.

இந்திக்காரர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறோம்? தங்கள் மாநிலத்தின் ஆட்சி மொழியாக, கல்விமொழியாக – மாநில மக்களின் பொது பேச்சுமொழியாக இந்தி மொழியை வைத்திருப்போரைக் கூறுகிறோம்.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இந்திக்காரர்களும் – குசராத்த்திகளும் 65% இருப்பர். அவர்கள்தாம் இந்தியாவை ஆள்கிறார்கள். இந்தியாவின் பெரும்தொழில், பெருங்குழுமங்கள் நடத்துவோரும் அவர்கள்தான். பிர்லா, டால்மியா, அம்பானி, அதானி, அகர்வால், இந்துஜா போன்றோர்! பார்சியான டாட்டா நடைமுறையில் இந்திக்காரரே! இந்திக்காரர்களும் குசராத்திகளும் இந்தியாவின் ஆளும் இனங்களாக – இந்தியாவின் ஏகாதிபத்திய இனங்களாக உள்ளார்கள். இவர்களுடைய கட்சிகள்தாம் காங்கிரசும் பாசக வும்! இவர்களுடைய ஆதிக்கத்தின் கீழ்தான் இந்திய நாடாளுமன்ற மக்களவையும் மாநிலங்களவையும் இருக்கின்றன. மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் தமிழ்நாட்டிற்கு 39 பேர் மட்டுமே!

வெள்ளைக்காரர்கள் தங்களின் வணிக வேட்டைக்காக உருவாக்கிக் கொண்ட ஒற்றை நிர்வாக மண்டலம்தான் இந்தியா! எனவே, இதை சனநாயக நெறிப்படி இறையாண்மையுள்ள தேசிய இனங்களின் கூட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்பதே தமிழ்த்தேசியத்தின் உடனடி இலக்கு!

இப்படிப்பட்ட அரசியல் மருத்துவந்தான் இந்தியாவுக்குத் தேவை! இதற்கான தமிழ்த்தேசிய மருத்தவர்கள்தாம் தமிழ்நாட்டுக்குத் தேவை!

தமிழின இறையாண்மை மீட்பு ஒரு பட்டிமன்றப் போட்டியோ, சொற்பொழிவுப் போட்டியோ அல்ல! கவிதைப் போட்டியோ ஓவியப் போட்டியோ அல்ல!

ஆதிக்க இனங்களைக் கீழிறக்கி, அடக்கப்பட்டுள்ள இனங்களுக்கான இறையாண்மை மீட்கும் போராட்டம் அது!

இனம் காக்க, மொழி காக்க, தாயகம் காக்க ஈகம் செய்ய அஞ்சாதீர்! ஈகம் செய்தால் நீங்கள் புதிய வரலாற்றில் ஓர் அத்தியாயத்திற்குப் பங்களிப்பு செய்ததாக வரலாறு உங்களைப் போற்றும்! தன்மானத்தோடு வாழ்வதற்காகப் போராடுவோம்! போராடுவதற்காக வாழ்வோம்!

அடுத்தவர் ஈகத்தை அதிகமாகப் புகழ்ந்து அவர்களின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளக் கூடாது! புதிய வரலாறு படைக்கும் ஆற்றலும் உரிமையும் எனக்குள் இருக்கிறது என்று நெஞ்சுக்குள் உறுதி எடுங்கள்!

எனக்குப் பின்னால் எத்தனை பேர் வருகிறார்கள் என்று அடிக்கடி திரும்பிப் பார்க்காதீர்கள்! எனக்கு முன்னால் என் இலட்சியம் இருக்கிறது, அடைய வேண்டிய இலக்கு இருக்கிறது என்ற பார்வையுடன் முன்னேறுங்கள்.

வீதிக்கு வாருங்கள்! வீரம் காட்டுவோம்!

===============================
தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் மையப்படுத்தப்பட்ட இணையவழி நோயாளி கருத்துப்பதிவு அமைப்பு தொடக்கம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்

20வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் மையப்படுத்தப்பட்ட இணையவழி நோயாளி கருத்துப்பதிவு அமைப்பு தொடக்கம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்

20வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு

பொது சேவை மையங்களுக்கும் கிராம ஊராட்சிகளுக்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவை – மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சேவா சே சம்ரித்தி (சேவையின் மூலம் செழிப்பு) -ஊராட்சிகளில் சேவை

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.  அதிகாரம்: இல்வாழ்க்கைபால்: அறத்துப்பால் விளக்கம்:பெண்களைப்

சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்

–சமூகத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்க வேண்டும்**- முதலமைச்சர் விஜய், பக்ரீத் வாழ்த்துச்