சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023 – 24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையும் அவ்வாறே பட்ஜெட் தாக்கலானது.
பெண்களுக்கான உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பெண்கள் ஆவலோடு இந்த பட்ஜெட் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு வரும் நிதி ஆண்டில் இருந்து மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். வரும் செப்டம்பர் 15-ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும். இதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இலவச வைபை வசதி
சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சியின் முக்கிய பொது இடங்களில் இலவச ஷ்வீயீவீ சேவைகள் வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக, சென்னை கோவை ஓசூர் டி.என்.டெக் சிட்டி அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.