ராஞ்சி: ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை இன்று மாலை 3.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. இந்நிலையில் தான் ஜார்க்கண்ட்டில் கடந்த 5 ஆண்டு அரசியல் நிலவரம் என்ன? தற்போது எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு எம்எல்ஏக்கள் உள்ளனர்? வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எப்படி அமையும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு கடந்த 2019ல் சட்டசபை தேர்தல் என்பது நடந்தது. இந்த சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் என்பது 2025 ஜனவரி 5ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் மகாராஷ்டிரா மாநிலத்துடன் சேர்த்து ஜார்க்கண்ட்டுக்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஜார்கண்ட் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் நவம்பர் மாதம் 13ம் தேதியும், 2வது கட்ட தேர்தல் நவம்பர் மாதம் 20ம் தேதியும் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை மகாராஷ்டிராவை போல் நவம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஜார்கண்ட்டில் யார் ஆட்சியை பிடிக்கிறார்கள்? என்பது தெரிந்து விடும்.
இந்நிலையில் தான் ஜார்க்கண்ட்டில் அரசியல் நிலவரம் என்ன? எந்த கட்சிக்கு எத்தனை எம்எல்ஏக்கள் உள்ளனர்? வரும் தேர்தலில் கூட்டணி எப்படி அமையும்? என்பது பற்றிய தகவல்களை இங்கு பார்க்கலாம். அதாவது ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
கடந்த 2019 ல் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு தனி பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. அதிகபட்சமாக ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. அதேபோல் பாஜக 25 தொகுதிகளில் வெறன்றது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வென்றது. அதேபோல் ஜேவிஎம்(பி) கட்சி 3 இடங்களிலும், ஏஜேஎஸ்யூ கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து ஜார்க்கண்ட்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி என்பது அமைந்தது. ஆட்சியை பிடிக்க 41 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் இந்த கூட்டணிக்கு 46 எம்எல்ஏக்கள் இருந்தனர். முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டது.
இதற்கிடையே தான் கனிம சுரங்க நில விவகாரத்தில் முறைகேடு செய்ததாக ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. இதையடுத்து புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சாம்பாய் சோரன் பதவியேற்றார். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். இதில் அதிருப்தியடைந்த சாம்பாய் சோரன் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலிலும் ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து களமிறங்க உள்ளது. அதேவேளையில் பாஜக பிற கட்சிகளுடன் கூட்டணிக்கு முயன்று வருகிறது. அதுமட்டுமின்றி தற்போது ஹேமந்த் சோரன் கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் சாம்பாய் சோரன் பாஜகவுக்கு சென்றிருப்பது அந்த கட்சிக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது. இந்நிலையில் தான் தற்போது ஜார்கண்ட் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் தேதி என்பது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.