சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பகுதிநேர பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் (28). கடந்த டிசம்பர் 25 அன்று என்டிடிவியில் காட்டப்பட்ட பிஜப்பூரில் சாலை கட்டுமானப் பணியில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் செய்தியை அவர் வழங்கினார். இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தியது. இந்த சூழலில் ஜன.1ல் முகேஷ் சந்திரகர் மாயமானார். நேற்று முன்தினம் பீஜப்பூரின் சட்டன்பரா பஸ்தியில் இருக்கும் சாலை கட்டுமானப்பணி ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் வீட்டில் இருக்கும் செப்டிக் டேங்க் தொட்டியில் முகேஷ் சந்திரகரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொலையில் சுரேஷ்சந்திரகர் உறவினர்களான ரித்தேஷ் சந்திரகர், தினேஷ் சந்திரகர், மேற்பார்வையாளர் மகேந்திர ராம்தேகே கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க ஐபிஎஸ் அதிகாரி மயங்க் குர்ஜார் தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.