சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) ‘மேம்பட்ட தாய்- சேய் நல மையம்’ மற்றும் ‘மேம்பட்ட நரம்பியல் அறிவியல் மையம்’ ஆகியவற்றை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மேலும், ‘பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தின்’ கீழ், 150 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன ‘தீவிர சிகிச்சைப் பிரிவு’ கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் ஆளுநரும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியுமான திரு குலாப் சந்த் கட்டாரியா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் சண்டிகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மணீஷ் திவாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அதிநவீன மருத்துவ வசதிகளின் துவக்கம் மற்றும் அதற்கான அடிக்கல் நாட்டல் ஆகியவை, லட்சக்கணக்கான மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவைகள் கிடைப்பதை கணிசமாக வலுப்படுத்தும் என்று கூறினார். மக்களின் தொடர் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், “தூய்மை என்பது ஒரு நாள் செயல்பாடு அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை,” என்று குறிப்பிட்டார். “தூய்மை பாரதம்” முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புத் தூய்மைப் பணியைப் பாராட்டிய அவர், நோய்த்தடுப்பில் இத்தகைய பிரச்சாரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்று குறிப்பிட்டார்.
“12 ஆண்டுகளுக்கு முன், சுகாதார வசதிகள் இல்லாததால் எந்தவொரு குடிமகனும் பாதிக்கப்படக்கூடாது என்றும், தரமான சிகிச்சை மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்றும் நாங்கள் உறுதி மேற்கொண்டோம். கடந்த 12 ஆண்டுகளில் எட்டப்பட்ட சாதனைகள் இந்த உறுதிப்பாட்டின் விளைவே ஆகும்”, என்று பிரதமர் கூறினார்.






