நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
இதற்காக ஹெலிகாப்டரில் அண்ணாமலை ராமநாதபுரம் வந்தார். அவரது ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:- ராமநாதபுரத்தில் பிரதமருக்கு பதிலாக அவரால் களமிறக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். பிரதமர் மோடி, ராமநாதபுரத்தை தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கிறார். பிரதமர் மோடி போட்டியிட்டால் எப்படி ஆதரவு தருவீர்களோ அப்படி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தர வேண்டும். ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தான்.
எம்.ஜி.ஆரை, கருணாநிதி வெளியேற்றியதை போல ஓ.பன்னீர்செல்வத்தை, எடப்பாடி பழனிசாமி வெளியேற்றி இருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் விஸ்வரூபம் தெரியும். ராமநாதபுரம் மாவட்ட தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே முடியும். இவ்வாறு அவர் கூறினார்.