மேகதாதுவில் அணையா… போராட்டம் நடக்கும்…? எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கை

சென்னை:
கர்நாடக மாநிலம் மேகதாதுவின் குறுக்கே அணை கட்டும் முயற்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
-திமுக ஆட்சி செய்யும்போதெல்லாம் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுப்பது வாடிக்கை. கச்சத் தீவு, காவிரி என ஆரம்பித்தது இன்று வரை நீடிக்கிறது. கர்நாடகாவின் மேகதாதுவில் அணை கட்டியே தீரப்படும் என்றும், அதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தது. அப்போதே காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக அரசு அதை கண்டித்திருக்க வேண்டும். ஆனால், கர்நாடகத்தில் உள்ள தங்களின் குடும்பத் தொழில்கள் பாதிக்கப்படும் என்ற பயத்தில், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கைகட்டி, வாய் பொத்தி, பேசா மடந்தையாக வேடிக்கை பார்த்த திமுக அரசையும், சந்தர்ப்பவாத முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கடந்த 20 நாட்களாக ஊழல் அமைச்சர் செந்தில்பாலாஜி, மத்திய அமலாக்கத் துறையின் கைகளில் சிக்கிவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே திமுக அரசு செயல்படுகிறது. எனவே, தமிழகத்தில் திமுக ஆட்சியின் சூழ்நிலையை, கர்நாடக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், அம்மாநில துணை முதல்-வர் டி.கே.சிவக்குமார் 20.6.2023 அன்று மத்திய நீர்வழித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய கையோடு 30.6.2023 அன்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
இனியாவது கர்நாடகத்தின் தந்திரத்தைப் புரிந்துகொண்டு, திமுக அரசு, ஊழல் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினரின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று காலம் கழிப்பதை விட்டுவிட்டு, மேகதாது பிரச்சனையுடன், தமிழகத்தில் தற்போது காணப்படும் விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சனைகளைத் தீர்க்கவும், அனைத்துத் துறைகளிலும் தலைவிரித்தாடும் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் போன்றவைகளை கைவிட்டுவிட்டு, மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆனபின்னும் டெல்டா மாவட்டங்களின் கடைமடை வரை தண்ணீர் சென்றடையாமல் சிரமப்படும் விவசாயிகளின் வேதனைகளிலும் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
கர்நாடக தமிழக மக்களின் உறவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமாருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசோடு எது எதற்கோ மோதும் திமுக அரசின் முதலமைச்சர், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 38 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களோடு, உடனடியாக புதுடெல்லிக்கு படையெடுத்து, கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேகதாதுவில் அணையா… போராட்டம் நடக்கும்…? எடப்பாடி பழனிசாமி காட்டமான அறிக்கை