சென்னை:
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; தமிழ்நாடு மாநில சுகாதாரப்பேரவையை கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே இந்த பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பேரவையின் 28 கோரிக்கைகளில் 26 கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு அதற்காக ரூ.23 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
14 மாவட்டங்களில் சுகாதார பேரவை சங்கம் உள்ளன. அவற்றில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டு நிறுவன அமைப்பினர், சக ஆர்வளர்கள், தன்னார்வளர்கள் உறுப்பினராக உள்ளனர்.
முதலாம் ஆண்டு இந்த சங்கம் சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், அரியலூர், தர்மபுரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தென்காசி, நீலகிரி, விருதநகர், உள்பட 14 மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான பேரவையில் இன்று 16 மாவட்டங்களில் அதாவது திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுர், திருவாரூர், ஈரோடு, கன்னியாகுமரி உள்பட 16 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இவற்றிற்கு தலைமையாக செயல்படுவார்கள்.
இதையடுத்து கொரோன குறித்து பேசிய அவர், கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து உலகம் முழுவதும் மீண்டும் தாண்டவம் ஆடுகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை; கொரோனா வழிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், உடன் வருவோர், மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் இவ்வாறு கூறினார்.