அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் தருவோம்
இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் ஏ.எம். ஷாஜஹானை அமைச்சராக்குவதற்கு பரிந்துரைத்திருக்கிறோம்
இ.யூ.முஸ்லிம் லீக் மாநில நிர்வாகக்குழு அவசர கூட்டத்திற்கு பின் நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில்
பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். ஷாஜஹானை அமைச்சராக்குவதற்கு பரிந்துரைக்கிறோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகக்குழு அவசர கூட்டத்திற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் 21-05-2026 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைமையகமான சென்னை மண்ணடி காயிதே மில்லத் மன்ஜிலில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவர்
கே. நவாஸ்கனி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பி. சையது பாரூக் பாஷா, ஏ.எம். ஷாஜஹான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில துணைச் செயலாளர் மௌலவி ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி கிராஅத் ஒதினார்.
மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வரவேற்புரையாற்றினார்.
மாநில துணைத்தலை வர்கள் பேராசிரியர் சே.மு.மு. முஹம்மது அலி, கே.டி. கிஸர் முஹம்மது, மாநில செயலாளர்கள் காயல் மகபூப், எச். அப்துல் பாசித், வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், கே.எம். நிஜாமுதீன், எச்.எம். அப்துல் காலிக், மாநில துணைச்செயலாளர்கள் வி.எம். பாரூக், ஏ. அன்சர் பாஷா, ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி, மகளிரணி தேசிய தலைவர் ஏ.எஸ். பாத்திமா முஸப்பர் எம்.சி., ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும் தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெறுவதற்கு அழைப்பு விடுத்தது குறித்தும் விரிவாக பேசி, நிர்வாகிகளின் கருத்துகளை உள்வாங்கி அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெறுவதற்கு கூட்டத்தில் ஒப்புதலை பெற்றார்.
தலைமை நிலைய பாடகர் ஏ. ஷேக் மதார் ஆமிரி துஆ ஒதினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்ததாவது:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில உயர்மட்ட குழுக் கூட்டம், இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
இக்கூட்டத்தில் மூன்று முக்கியமான செய்திகள் பரிமாறப்பட்டன.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி தமிழகத்திலே அமைந்திருக்கிறது இந்த ஆட்சி தொடர்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் சையது பாருக், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். ஷாஜஹான் ஆகிய இருவரும் தங்களது நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்ததன் மூலமாக இந்த ஆட்சி சிறப்புற தொடர்கிறது.
பெருந்தன்மையான முடிவு
ஆதரவு கொடுக்கையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாங்கள் எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை. எந்தக் கோரிக்கையையும் முன் வைக்கவில்லை. ஆனாலும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு இந்திய யூனியன் முஸ்லிம் லீகையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள பெருந் தன்மையோடு முடிவெடுத்து இருக்கிறது.
அதன்படி, எங்கள் இயக்கத்தைச் சார்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுள் ஒருவருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கலாம் என்று முடிவெடுத்து இருப்பதாகவும், அதற்கு எங்களது ஒப்புதல் வேண்டும் என்றும் எங்களிடத்தில் கேட்டார். எங்களுக்கு எதிர்பாராத செய்தி. நாங்கள் கேட்டதும் இல்லை; கோரிக்கை வைத்ததும் இல்லை. இருந்தும் உயர்ந்த நோக்கத்தோடு எங்களையும் அமைச்சரவையில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று எங்களை அனுப்பிய தற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
அரசியல் ஆலோசனைக்குழு
எங்கள் இயக்கத்தில் இதுபோன்று எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அரசியல் ஆலோசனை குழு இருக்கிறது. இது போன்ற தருணங்களில் அதன் முடிவுதான் இறுதியான முடி வாக இருக்கும். இக்குழுவின் தலைவராக – நபிகள் நாயகத்தின் 38ஆவது தலைமுறை என்று கொண்டாடப்படும் கேரளாவின் சையது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் – இன்றைய கேரள அமைச்சர் குஞ்ஞாலிக்குட்டி உள்ளிட்ட இவர்களெல்லாம் இணைந்து கலந்தாலோசனை நடத்தினர். இறுதியில், தமிழக வெற்றிக் கழகம் அமைக்கும் அமைச்சரவையில் முஸ்லிம் லீகுக்கு இடம் கொடுப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றனர்.
ஆக இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய அமைப்பின் ஒப்புதலையும் பெற்று, அதன் அடிப்படையில் இன்று காலையில் நாங்கள் இங்கே கூட்டத்தை நடத்தி, தமிழக வெற்றிக் கழகம் அமைக்கும் புதிய அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் இடம்பெறுவதற்கு ஆதரவளிப்பது என்று முடிவு எடுத்திருக்கிறோம்.
சகோதர-கசோதரிகளிடையே கருத்து பரிமாற்றங்கள்
அப்படி நாங்கள் அமைச்சரவையில் இடம் பெற ஒப்புக்கொண்ட தருணத்தில் எங்களது அருமை சகோதர சகோதரிகளோடு கருத்து பரிமாற்றங்கள் செய்து, இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றி ருக்கும் நிலையில், இருவருக்கும் அமைச்சர் பொறுப்பு கேட்கலாமே என்ற தொனியில் அதிகமாக கலந்துரையாடப்பட்டது.
அந்த கருத்தை உள்வாங்கிக் கொண்டு, “”முதலில் அவர்கள் ஒப்புக்கொண்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்து அனுப்புவோம்… அதற்குப் பிறகு அடுத்தவரைப் பற்றி நாம் சிந்திப்போம், கேட்போம்”” என்று கூறப்பட்டதை அடுத்து அவர்கள் சாந்த மாயினர். இருவருள் யாரை அமைச்சராக்குவது என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில தலைவர் தேசிய தலைவர் என்கிற அடிப்படையில் என்னிடத்தில் அவர்கள் ஒப்படைத்து விட்டனர். அதன் படி பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
ஏ.எம்.ஷாஜஹான் அவர்களை நாங்கள் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு பரிந்துரை செய்வது என்று முடிவெடுத்திருக்கிறோம்.
புதிய அரசு தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லாட்சி செய்வ தற்கும் முந்தைய ஆட்சியில் செய்யப் பட்ட சிறப்பான மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தை யும் தொடர் வதற்கும் தேவை யான அனைத்தையும் செய்வதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தெரிவித்து இருக்கிறார். மாநிலத்தின் அனைத்து மக்களும் போற்றும் வகையில் வரலாறு படைக்க கூடிய ஒரு நல்லாட்சியாக இது அமைய வேண்டும் என்ற வாழ்த்துகளோடு நாங்கள் எங்கள் முடிவை எடுத்திருக்கிறோம்.
கேள்வி: தேர்தல் முடிவு வெளியான தொடக்கத்தில் இருந்து, “”நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம்… கூட்டணி தலைவர் ஸ்டாலின் அவர்களைக் கேட்டுதான் எந்த முடிவையும் எடுப்போம் என்று கூறினீர்களே?
பதில்: இன்று காலையில் ஸ்டாலின் அவர்கள் எங்களிடத்தில் பேசினார். தங்களுக்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், எடுத்துள்ள புதிய முடிவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறிவிட்டார்.
கேள்வி: இப்பொழுது நீங்கள் அவரைக் கலந்தா லோசித்தீர்களா?
பதில்: இது குறித்து தொடர்ந்து நாங்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.
கேள்வி: “”நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்; புதிய அரசு அமைவதற்கு மட்டுமே ஆதரவு தெரிவித்தோம்”” என்று நீங்கள் முதலில் கூறிய நிலையில், இப்பொழுது புதிய அரசின் அமைச்சரவையில் இடம் பெறுகிறீர்கள். அப்படியானால் திமுக கூட்டணியில் தொடர்வீர்களா?
பதில்: தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசின் அமைச்சரவையில் பங்கேற்பது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எடுத்துள்ள முடிவு குறித்து மட்டுமே இப்பொழுது பேசப்படுகிறது. இது தேர்தல் காண முடிவு அல்ல ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது குறித்த முடிவு. எங்களது அகில இந்திய தலைவர் அறிவுறுத்தலின்படி இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம். இந்த அரசு நல்ல முறையில் தொடர்வதற்கு தேவையான அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் நாங்கள் தருவோம்.
கேள்வி: புதிய அரசு மக்களுக்காக இயங்கும் வரை வரவேற்போம் என்றும், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று வரும் பொழுது எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எங்கள் போராட்டத்தை தொடர்வோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அப்படி அவர்கள் ஒருவேளை போராட்டத்தில் ஈடுபட்டால் ஆட்சியில் அங்கம் வகிக்கும் நீங்கள் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?
பதில்: ஆட்சியில் இருப்பவர்கள் எப்படியும் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் மக்கள் நலப் பணிகள் அனைத்தையும் செய்வார்கள். ஒருவேளை இந்த ஆட்சியில் குறைகள் இருந்தால் நிச்சயமாக நாங்கள் அதை சுட்டிக் காட்டுவோம். தேவைப்பட்டால் தட்டிக் கேட்போம்.
கேள்வி: தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு தேர்தலை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்ட திமுக கூட்டணி கலைக்கப் படுமா?
பதில்: அந்தப் பேச்சுக் கெல்லாம் இப்பொழுது இடமில்லை. தமிழ்நாட்டில் அமைக்கப் பட்டிருக்கும் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான புதிய அரசின் அமைச்சரவையில் நாங்கள் இடம் பெறுவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையில் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். ஷாஜஹான் அவர்களை அமைச்சராக்குவதற்கு பரிந்துரைத்திருக்கிறோம். வருங்காலத்தில் எங்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பொறுப்பிடங்களை தந்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கையை உங்கள் மூலம் முன்வைக்கிறோம்.
கேள்வி: அமைச்சரவையில் எந்தத் துறை வேண்டுமென்று கேட்டு இருக்கிறீர்களா அல்லது தரப்படும் எந்தத் துறையானாலும் ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: நாங்கள் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம் என்று நாங்கள்தான் முன்பே சொல்லி இருக்கிறோமே? அப்படி இருந்தும் அவர்கள் எங்களை மதித்து எங்களை பெருமைப்படுத்தக்கூடிய வகையில் அமைச்சரவையில் இடம் தந்திருக்கிறார்கள். அந்தப் பெருந்தன்மையை நாங்கள் பாராட்டுகிறோம்.
கேள்வி: தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத் தில் முஸ்லிம் லீகுக்கு பங்கு கிடைத்திருக்கிறது. இதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
பதில்: இது முதல் முறை என்று சொல்லி விட்டீர்கள் அல்லவா? இந்த முதல் முறை கடைசி முறையாக இருக்காது. இப்போதைக்கு முதல் முறை அவ்வளவுதான். இனி தொடரும்.
கேள்வி: புதிய அமைச்ச ரவையில் இடம் பெறுவது என்ற உங்களது முடிவை முதலமைச்சருக்கு தெரிவித்து விட்டீர்களா?
பதில்: இப்பொழுதுதான் கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவெடுத்து இருக்கிறோம். முதன்முறையாக உங்களிடம் தான் அறிவிக்கிறோம். முறைப்படி நாங்கள் எங்கள் அறிவிப்பை -பரிந்துரையை புதிய அரசுக்குத் தெரிவிப்போம்.
கேள்வி: இன்றே அமைச்சரவையில் உங்கள் பதவியேற்பு இருக்குமா?
பதில்: அமைச்சரவையில் இடம்பெறுவது என்று நாங்கள் முடிவெடுப்பதற்கு ஏதோ எங்களில் நான்கு ஐந்து பேர் மட்டும் பேசி முடிவெடுத்து விட முடியாது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து எங்களது அங்கத்தினரை வரவழைத்து, இன்று காலை 11 மணிக்கு ஒன்று கூடிதான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
எங்களது இந்த முடிவின்படி முதலமைச்சர் அவர்கள் இறுதி முடிவு எடுத்து, அதன் அடிப்படையில் இன்றோ நாளையோ எங்கள் கட்சியின் புதிய அமைச்சருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
கேள்வி: புதிய அமைச்சரவையில் நீங்கள் இடம் பெறுவது குறித்து திமுக தலைவர் உங்கள் இடத்தில் ஏதாவது சொன்னாரா?
பதில்: அதுதான் முன்னரே சொன்னேனே? அவரை கலந்தாலோசித்த பின்பு தான் நாங்கள் தேர்தலை சந்தித்தோம். இப்போதைய எங்கள் முடிவையும் அவரிடம் தெரிவித்தாகிவிட்டது. இன்று காலையில் எங்களைத் தொலைபேசியில் அழைத்து அவர் வாழ்த்தும் சொல்லிவிட்டார்.
இவ்வாறு பேராசிரியர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்றோர்:
மாநில செயலாளர் எம். அவுதா காதர், மாநில துணைச்செயலாளர்கள் ஆப்பனூர் ஆர். ஜபருல்லாஹ், எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, எம்.ஜே.ஏ. ஜமால் முஹம்மது இப்ராஹிம், கே.ஏ.டபுள்யூ. அப்துல் காதர் ஷெரீப், பி.எம். அப்துல் ஜப்பார், வி. முஹம்மது தையூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர் களாக சென்னை வடக்கு மாவட்ட தலைவர் கமுதி ப. சம்சுதீன், மாவட்ட செயலாளர் எம்.என்.எம். இர்பான் சுபைர், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பனையூர் எஸ். அபூபக்கர், சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.எச்.எம். முஹம்மது இஸ்மாயில், மாவட்ட செயலாளர் கே. கோதர்ஷா, சென்னை மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் குலாம் முஹம்மது, மாவட்ட செயலாளர் முஸப்பர் அஹ்மத், மகளிரணி மாநில பொருளாளர் ஏ.எம். ஜெய்தூன், எம்.எஸ்.எப். தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், மாநில பொருளாளர் பாசித் ரஹ்மான், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொதுச்செயலாளர் கோம்பை ஜெ. நிஜாமுதீன், முஸ்லிம் யூத் லீக் மாநில பொதுச்செயலாளர் அன்சாரி மதார், மற்றும் பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.







