சென்னை:
தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
இந்த மருத்துவமனை 1912-ஆம் ஆண்டு 120 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக துவங்கப்பட்டு 834 படுக்கைகள் மருத்துவமனையாக 110 ஆண்டுகளாக மருத்துவ சேவை புரிந்து வருகிறது. இம்மருத்துவமனையில் பொது மருத்துவம், பொது அறுவை, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, புற்றுநோய் பிரிவு, குடல்நோய் பிரிவு, பல் மருத்துவம், தோல் மருத்துவம், சிறுநீரகவியல் துறை, மாரடைப்பு நோய் பிரிவு, நீரிழிவு நோய் மருத்துவம், குழந்தைகள் பிரிவு, தலைக்காயம் (அறுவை/மருத்துவம்), காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பிரிவு, வலிநிவாரண பிரிவு ஆகிய சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன.
இம்மருத்துவமனையில் தினமும் தோராயமாக 2900 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் டெலிகோபால்ட் கதிரியக்கம் கருவி இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் புற்றுநோய் கட்டிகளுக்கு மிகத்துல்லியமாக கதிர்வீச்சு சிகிச்சை செய்விக்க இயலும் மற்றும் வலியால் அவதியுறும் புற்றுநோய் நோயாளிகளுக்கு வலி நிவாரணியாகவும் ரத்த கசிவுகளை தடுக்கவும் இக்கருவி பயன்படும். தினந்தோறும் 30-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.
ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விபத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு துரிதமாக மருத்துவ சிகிச்சை பெற பிரத்தியேகமாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி நிதி ஒதுக்கீடு மூலம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பல் மருத்துவ கருவிகள் பெறப்பட்டு இன்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நவீன கருவிகளின் மூலம் துரிதமாக பல் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் பிரத்தியேகமாக சலவைக்கென்று புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் நவீன சலவை செய்யும் இயந்திரம் பெறப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நவீன சலவை இயந்திரம் மூலம் தினமும் 1000-க்கும் மேற்பட்ட துணிகள் சலவை செய்ய இயலும் என்று மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் எம்.பி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குநர் மரு.சாந்திமலர், பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் நே.சிற்றரசு, பெருநகர சென்னை மாநகராட்சி 9வது மண்டலக்குழுத் தலைவர் மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் ஈஸ்வரி வெங்கடேசன், ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மரு.மணி, நிலைய மருத்துவ அலுவலர் மரு.பிரதாப் ஆனந்த் மற்றும் உயர் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





