மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (06.05.2023) செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது;
மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு:
மிகப்பெரிய அளவிலான மருத்துவ முகாம்கள் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சேவையாற்றி வருகின்ற மருத்துவமனைகள், குறிப்பாக ஸ்ரீசத்ய சாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை, கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பாரத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை, ஆகிய 5 மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய அளவிலான மருத்துவ முகாமினை இந்த பகுதியில் நடத்திக் கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள் இருக்கின்ற இந்த பகுதியில் இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எக்கோ, இசிஜி, முழு உடல் பரிசோதனை, தொழுநோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை போன்ற பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் போன்ற பல்வேறு சிறப்பு மருத்துவர்களும் பங்கேற்று மருத்துவ சிகிச்சை ஆற்றி வருகிறார்கள். மரியாதைக்குரிய தமிழ்நாட்டு தலைமைச் செயலாளர் பெருமதிப்பிற்குரிய முனைவர்.வெ.இறையன்பு,இ.ஆ.ப., அவர்கள் தொடர்ச்சியாக இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து குடிசைப் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த ஆர்வம் கொண்டிருக்கிறார். அந்த வகையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்னாள் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் இதுபோன்ற முகாம்கள் அங்கே நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக பெரும்பாக்கம் பகுதியில் இன்றைக்கு இந்த முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1000த்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவ முகாம்களில் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் :
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 1250 இடங்களில் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு முதல் ஆண்டில் 1260 இடங்களிலும், 2வது ஆண்டு 1492 இடங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் 10 இலட்சம் பேரும், இரண்டாம் ஆண்டில் 15 இலட்சத்திற்கு மேற்பட்டவர்களும் இந்த முகாம்களின் மூலம் பயன்பெற்றுள்ளனர். இந்த முகாம்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 3 இடங்கள், ஒவ்வொரு மாநகராட்சிகளில் 4 இடங்களிலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 15 இடங்களிலும் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்ட இலக்கை தாண்டி இந்த முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்னுமொரு கூடுதல் சிறப்பாக காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறும் மருத்துவமனைகளையும் ஒருங்கிணைத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் இந்த முகாம்களை நடத்துவதில் அரசு பெருமைக்கொள்கிறது. ஏழை எளிய மக்களுக்கு மருத்துவச் சேவை ஆற்றுவதற்கு வசதியாக இந்த முகாம்கள் பெரிய அளவில் பலனளித்துக் கொண்டிருக்கிறது.
மேதகு ஆளுநர் புகாருக்கு பதில்:
நேற்றைக்கு முன்தினம் மேதகு தமிழ்நாட்டின் ஆளுநர் அவர்கள் பல்வேறு துறைகள் குறித்து தன்னுடைய பூதக்கண்ணாடியின் மூலம் குறைகளை கண்டறிவது எப்படி என்று தேடி தேடி அலசி ஏதோ ஒன்றை சொல்ல வேண்டும் என்பதற்காக அரசின் மீது குறைகளை கூற வேண்டும் என்ற நோக்கத்தோடு புகார்களை சொல்லியிருந்தார்கள். அதற்கு தொடர்ச்சியாக நாங்கள் அத்தகைய புகார்களுக்கு பதில்களை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. சித்த மருத்துவக்கல்லூரி பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளில் இல்லை என்ற குற்றச்சாட்டை நேற்றைக்கு முன்தினம் மறுத்து அது சம்பந்தமாக பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அதே செய்தித்தாளில் மேதகு ஆளுநர் அவர்கள் இன்னொரு புகார் குறித்தும் தன்னுடைய பேட்டியில் சொல்லியிருக்கிறார். அதுகுறித்தான விளக்கத்தை நேற்றைக்கு சம்பந்தப்பட்ட காவல்துறையின் தலைவர் அவர்கள் நேற்றைக்கு தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள் என்றாலும் துறையின் சார்பிலும் விளக்க வேண்டியது என்பது அவசியமாக இருக்கிறது. அந்த வகையில் ஆளுநர் தமது பேட்டியில் சிதம்பரத்தில் தமது பேட்டியில் குழந்தை திருமணம் தொடர்பான விவகாரத்தில் அதாவது இருவிரல் பரிசோதனை நடந்ததாக கூறியுள்ளார். அதாவது நடக்காத ஒன்றை நடந்ததாக கூறுவது என்பது மேதகு ஆளுநர் அவர்கள் வகிக்கும் பொறுப்புக்கு ஏற்றது அல்ல. அதாவது அவரது கூற்று தவறானது என்று உறுதிப்படுத்துவது இத்துறைக்கு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். எனவே அவர் கூறிய குற்றச்சாட்டை ஏற்று குழந்தைகளின் உரிமைக்கான தேசிய ஆணையம், தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி ஒருவாரத்திற்குள் அதற்கான பதிலை அனுப்ப அறிவுறுத்தி இருக்கிறார்கள். மேதகு ஆளுநர் அவர்கள் சொல்லியிருப்பது அந்த சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக சொல்லியிருக்கிறார். இதுகுறித்து மருத்துவ அலுவலர்கள் விசாரித்தனர். மேலும் அச்சமயத்தில் சிறுமிக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை படிவமும் ஆய்வு செய்யப்பட்டது. அப்படிவத்தில் மிகத் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. Two finger test என்று சொல்லக்கூடிய இருவிரல் பரிசோதனை அச்சிறுமிக்கு செய்யவில்லை என்று தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே ஆளுநரால் அரசின் மீது வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டு நான் ஏற்கெனவே சொல்லியதுபோல் பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் அவருக்கு ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டு கிடைக்கவில்லை. பாவம் ஒரு சிறுமியை சாட்சிக்கு அழைத்திருக்கிறார். இக்குற்றச்சாட்டு இல்லை என்று ஆதாரப்பூர்வமாக மறுக்கப்பட்டிருக்கிறது.
உலக அளவில் கொரோனா பேரிடர் அவசர நிலை விடுவிப்பு :
உலக அளவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 70 இலட்சம் பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இந்த கோவிட் பேரிடர் 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஊகானில் தொடங்கி மிகப் பெரிய அளவில் பதட்டத்தையும், மிகப் பெரிய அளவில் பொருள் இழப்பையும், மிகப் பெரிய அளவில் உயிரிழப்பையும் ஏற்படுத்தி, உலக மக்கள் முழுவதும் தொடர்ந்து பதட்டத்தில் இருக்க வேண்டிய சூழல் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் பெருமதிப்பிற்குரிய டாக்டர்.டெட்ரோஸ் அவர்கள் செய்தியினை நேற்று அறிவித்திருக்கிறார்கள். உண்மையில் மகிழ்ச்சி கலந்த செய்தி உலக மக்களை ஒரு மிகப்பெரிய அளவில் மனநிம்மதி அடையச் செய்யும் செய்தியாக இது இருக்கிறது. 15வது கோவிட் 19 அவசர நிலைக்குழு கூட்டப்பட்டு உலகளாவிய மக்களின் மீது கொண்டிருக்கிற பொதுசுகாதார அவசர நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு எனக்கு பரிந்துரைத்து இருக்கிறது என்று மரு.டெட்ரோஸ் கூறியிருக்கிறார். அதாவது அவசர நிலைக்குழு என்பது 15 முறை தொடர்ச்சியாக கூடி இப்போது பொது சுகாதார அவசர நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று டாக்டர். டெட்ரோஸ்க்கு அவர்களுக்கு அறிக்கை தந்திருக்கிறார்கள். அந்த ஆலோசனையை உலக சுகாதார அமைப்பு ஏற்று அதனை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். உலகளாவிய அவசர சுகாதார நிலையை நேற்று முதல் அவர் விடுவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார். இது மிகப்பெரிய அளவிலான மனநிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று நானும் என்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தியினை பதிவிட்டிருக்கிறேன். இது மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான் என்றாலும்கூட, தனிமனித பாதுகாப்பு என்பது தொடர்ச்சியான அவசியம் என்பதை நாம் உணர்வோம். ஜப்பான் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு வருவதற்கு முன்னாலே முககவசங்கள் அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் கொரோனா பாதிப்பு இன்னமும் தொடருமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் அவசர கால நிலை பொதுசுகாதாரத்துறையில் அவசர நிலைக்கு மட்டுமே இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவில் தொடர்ச்சியாக பீட்டா, டெல்டா, காமா, கப்பா, ஒமைக்ரான் என்று பல வகைகளில் தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கடைசியாக நமக்கு வந்த பாதிப்பு XBB1.66 அந்த பாதிப்பும்கூட 500ஐ தாண்டியிருந்த பாதிப்பு நேற்றைக்கு 200க்கும் கீழே வந்துவிட்டது. எனவே இதைத்தாண்டி இன்னொரு புதிய பாதிப்பு வருமா என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் அவசரநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் தனிமனித பாதுகாப்பு அவசியம். எனவே பொது இடங்களில் பெரிய அளவில் கூடும்போது முக கவசங்கள் அணிவதை தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவிக் கொள்வதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இத்துறையின் வேண்டுகோள் என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.அரவிந்த் ரமேஷ், அரசு தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார், இ,ஆ,ப., தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.ச.உமா, இ,ஆ,ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ஆ.ர.ராகுல் நாத்,இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேலான்மை இயக்குநர் திரு.ம.கோவிந்தராவ்,இ,ஆ,ப., மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மரு.சண்முகக்கனி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்






