திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி இருப்பதாக தெரியவருகிறது.அத்தொகையையும் ராஜேஷ் முழுமையாக கட்டி முடித்துள்ளார். மேலும் கூடுதல் பணம் கட்டச்சொல்லி தொலைபேசி மூலம் ஹிந்தியில் பேசி சிலர் மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து ராஜேஷின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பலரின் தொலைபேசி எண்ணிற்கும் அனுப்பி இருக்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான ராஜேஷ் விஷம் குடித்துள்ளார்.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ராஜேஷ் இறந்த பிறகும் அவரது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் அவரது பெற்றோரை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.