சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.14 கோடி மதிப்புள்ள 13 கிலோதங்கம், 120 ஐபோன்கள், லேப்டாப், வெளிநாட்டு சிகரெட், குங்குமப்பூ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்டதாக 113 பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் பயணிகள் தங்கம், ஐபோன், லேப்டாப், வெளிநாட்டு சிகரெட் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது, இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கபட்டது. விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி பல மணி நேரமாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடத்தலில் தொடர்பு இல்லாத 73 பேரை வெளியே அனுப்பினர்.
பின்னர், 113 பயணிகளிடம் பிற்பகல் 3 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, சுங்கத்துறை அலுவலகத்திலேயே அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்தனர். அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் மீண்டும் விசாரணையை தொடங்கிய அதிகாரிகள் பின் அவர்களை சோதனை செய்தனர்.
நள்ளிரவு வரை நடந்த இந்த சோதனையில் பயணிகள் உள்ளாடைகளுக்குள் தங்கப் பசைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் சூட்கேஸ்லைனிங் உள்ளே தங்கத்தை ஸ்ப்ரிங் கம்பிகளாக மாற்றி மறைத்து வைத்திருந்தனர். சூட்கேஸ் மற்றும் பைகளில் வைத்து 120 ஐபோன், 84 ஆண்ட்ராய்டு போன், வெளிநாட்டு சிகரெட்கள், குங்குமப்பூ, லேப்டாப்புகள் உள்ளிட்ட பொருட்களும் மறைத்து வைத்தியிருந்ததை உறுதிபடுத்தினர்.







