ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு அவர் கூறியதாவது:
இதுதான் நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்களே, சகோதரிகளே… அவர்கள் உங்கள் மங்களசூத்திரத்தை (தாலியை) கூட விட்டு வைக்க மாட்டார்கள். அவ்வளவு தூரம் கூட செல்வார்கள். தாய் மற்றும் சகோதரிகளுக்கு சொந்தமான தங்கம் கணக்கிடப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்பட்டு பரப்பப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. இதை யாருடன் பகிர்ந்து கொள்வார்கள்? மன்மோகன் சிங்கின் முந்தைய அரசு முஸ்லிம்களுக்கு நிலத்தின் முதல் உரிமை உண்டு என்று கூறியது.
முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது. அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா? இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சிற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் நகல்களை பிரதமருக்கு அனுப்பப்போவதாகவும், மோடிக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துடன் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஒரு பிரதமர் எப்படி எல்லாவற்றிலும் பொய் சொல்லி இப்படி போலியான செய்திகளை பரப்புவார்? இந்த நாட்டில் அதிகம் பொய் சொல்பவர் அவர்தான் என்பதை அவரது நேற்றைய பேச்சு உணர்த்துகிறது என்று அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் மதவாத உணர்வுகளைத் தூண்டி இந்திய மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் பாஜகவிற்கு சாதகமாக இல்லை என்பதை புரிந்து கொண்ட பிறகு பிரதமர் இதுபோன்ற கீழ்த்தரமான தந்திரங்களை கையாள்கிறார்” என்று அவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேரில் சந்தித்து விளக்குவதற்காக பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “எங்களது தேர்தல் அறிக்கையின் நகலை அவருக்கு வழங்குவோம். எங்கள் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் எங்களது தேர்தல் அறிக்கையின் நகலை அவருக்கு அனுப்பி வைப்பார்கள். எல்லாவற்றிலும் பொய் சொல்ல பிரதமருக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளதா? எல்லாவற்றிலும் தலையிடும் தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் ஏன் மவுனம் காக்கிறது” என்று தெரிவித்தார்.