மதுரை:-
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் புயலால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. அமைச்சர் சட்டமன்ற, உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்ற உறுப்பினர்கள் என்று அனைத்துக் கட்சிகளை சார்ந்தவர்களும் களத்தில் இறங்கி மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.
5000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. 1000 கோடி மட்டுமே ஒதுக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற தருணங்களில் மாநில அரசை விமர்சிப்பதை அதிமுக நிறுத்த வேண்டும்.
விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வருகிற டிசம்பர் 29 திருச்சியில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெறும். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுவர்.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்ற இருப்பதாக தெரிவித்தார். இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கின்ற ஒரு மாநாடாக இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த மாநாடு அடித்தளம் அமைப்பதாக அமையும் என நம்புகிறேன் என்றாார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தந்த மாநிலங்களில் சூழல்களை பொறுத்து மக்கள் தீர்ப்பளித்து உள்ளனர். இது தேசிய பார்வையோடு நடந்த தேர்தல் அல்ல மோடியா, ராகுல் காந்தியா என முன்னிறுத்தப்பட்ட தேர்தல் அல்ல. ராஜஸ்தானில் உள்ள பிரச்சனைகள் வேறு மத்திய பிரதேசத்தில் உள்ள பிரச்சனைகள் வேறு சதீஷ்கரியில் உள்ள அரசியல் சூழல்கள் வேறு தெலுங்கானாவில் உள்ள சூழல்கள் வேறு. எனவே, மாநிலங்களுக்கு மாநிலம் பிரச்சனைகள் வேறுபட்டு இருக்கன்ற சூழலில் அங்கு உள்ள மாநில தலைவர்கள் மக்களிடையே பெற்ற செல்வாக்கு ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அந்த தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர் எனறார் விசிக தலைவர் திருமாவளவன்.






