இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் 2014-க்கு முன் பல தசாப்தங்களாக கவனிக்கப்படாமல் இருந்தன. அவர்கள் ஆரோக்கியமான, கண்ணியமான வாழ்க்கை நடத்த தேவையான ஆதரவு இல்லாமல் விடப்பட்டனர். சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட பல பழங்குடிப் பகுதிகளில் மிகக் குறைவாக இருந்தன.
ஆனால் 2014 முதல், இதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முன்முயற்சிகள் பழங்குடி சமூகங்களின் தேவைகளை அங்கீகரித்து அவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளன. பல தலைமுறைகளாக ஆதரவளிக்கப்படாத கல்வி முதல் சுகாதாரம், பொருளாதார அதிகாரமளித்தல் வரை இப்போது இந்த சமூகங்களுக்கு சாத்தியமாகியுள்ளன.
உதாரணத்திற்கு கல்வியை எடுத்துக்கொண்டால், 2014-ம் ஆண்டுக்கு முன் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் சில இருந்தன. ஆனால், அவற்றில் வசதிகளும் வளங்களும் குறைவாக இருந்தன. மோடி அரசின் பழங்குடி சமூகங்களின் கல்வி மீதான கவனம் இந்தப் பள்ளிகளின் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தது. இன்று, 715 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 476 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 1.33 லட்சம் மாணவர்கள் இவற்றில் பயில்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் நவீன வசதிகள், டிஜிட்டல் வகுப்பறைகள், விளையாட்டு உள்கட்டமைப்பு ஆகியவை உள்ளன. இவை பழங்குடியின குழந்தைகள் தங்களின் நகர்ப்புற சகாக்களுக்கு இணையான கல்வியைப் பெறுவதை உறுதி செய்கின்றன. ரூ.17,000 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை 3 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மாணவர்களுக்குக் கிடைப்பதன் மூலம் அவர்கள் உயர் கல்வியும் சிறந்த தொழில் வாய்ப்புகளும் பெறுகிறார்கள்.
சுகாதார கவனிப்பும் இதிலிருந்து மாறுபட்டதல்ல. 2014-க்கு முன், பழங்குடி சமூகங்களுக்கு தரமான சுகாதார அணுகல் குறைவாக இருந்தது. ஆனால் அதன் பின்னர், ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி, நடமாடும் மருத்துவக் குழுக்கள் தற்போது பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளின் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைந்துள்ளன. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் 1.5 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன, இது சுகாதாரத்தை மேம்படுத்துகிறது மற்றும் நோய்கள் பரவுவதைக் குறைக்கிறது.
அரிவாள் செல் ரத்த சோகையை ஒழிப்பதற்கான நாடு தழுவிய செயல்பாடு, பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய அரிவாள் செல் இரத்த சோகை ஒழிப்பு இயக்கம், 2047 க்குள் இந்த நோயை முழுமையாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 4.6 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் இப்போது பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
வன உரிமைகள் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டதன் மூலம், பழங்குடியினரின் நில உரிமைகளை அங்கீகரிப்பதிலும் பாதுகாப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2014-க்குப் பின், வன உரிமைச் சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு பழங்குடி குடும்பங்களுக்கு 1.9 கோடி ஏக்கர் நிலத்துக்கு 23 லட்சத்துக்கும் அதிகமான நில உரிமை வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார அதிகாரமளித்தல் என்பது பழங்குடி சமூகத்திடம் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்திய மற்றொரு துறையாகும். 2014-க்குப் பின் வன வளங்களைத் திறம்படப் பயன்படுத்த தேசிய மூங்கில் இயக்கம் போன்ற முயற்சிகள் பழங்குடியினரின் பொருளாதார நிலையை மறுவரையறை செய்துள்ளன. மூங்கிலை ஒரு மரமாக வகைப்படுத்தியதன் மூலம், பழங்குடி குடும்பங்களுக்கு மூங்கிலை அறுவடை செய்யவும், பதப்படுத்தவும், விற்கவும் அரசு புதிய வாய்ப்புகளைத் திறந்தது. அவர்களுக்கு நிலையான வருமான ஆதாரத்தை வழங்கியது.
உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, நக்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில். மோசமான சாலை இணைப்பு, சுத்தமான குடிநீர் இல்லாமை, நம்பகத்தன்மையற்ற போக்குவரத்து ஆகியவை அன்றாட போராட்டங்களாக இருந்தன. ஆனால் 2014 முதல், இந்த தொலைதூர பகுதிகளை பிரதான நீரோட்டத்துடன் இணைக்க ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, பழங்குடி கிராமங்களை நகர்ப்புற மையங்களுடன் இணைத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் வர்த்தகத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளன
பல ஆண்டுகளாக, பழங்குடி வீரர்களின் பங்களிப்புகளும் தியாகங்களும் பெரும்பாலும் மறக்கப்பட்டன. ஆனால் இப்போது, பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடி மக்கள் கௌரவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் செய்த மகத்தான பங்களிப்புகளுக்கும் தியாகங்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறது. ஹபீப்கஞ்ச் போன்ற ரயில் நிலையங்களின் பெயரை ராணி கமலாபதி ரயில் நிலையம் என மாற்றியது, நாடு முழுவதும் பழங்குடி சுதந்திர போராட்ட அருங்காட்சியகங்களை உருவாக்கியது ஆகியவை பழங்குடியின நாயகர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளன.
பழங்குடி சமூகத்தைப் புறக்கணிப்பிலிருந்து அதிகாரமளித்தலாக மாற்றுவது வெறும் வாக்குறுதி அல்ல – இது அரசின் கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகள் மூலம் ஒவ்வொரு நாளும் வடிவமைக்கப்படும் எதார்த்தமாகும். இது இந்தியாவின் பழங்குடி மக்களுக்கு பிரகாசமான, அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு வழி வகுக்கிறது.