நீரின்றி அமையாது உலகு என்று கூறுவதுண்டு. இது எதனால் என்றால் நம் வாழ்க்கையில் நீர் மிகவும் ஒன்றிப்போன ஒன்றாகும். நீர் இல்லாவிட்டால் நாமும் உயிர் வாழ முடியாது. இயற்கையும் அழிந்துபோகும். உலகம் வெப்பக்காடாக மாறி அழிவை ஏற்படுத்தும். எனவே நீரின் முக்கியத்துவத்தை அனைத்து தரப்பு மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தை கருத்தில் கொண்டு நாம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, தண்ணீர் வளத்தை பெருக்கும் வழிகள் என்ன என்பதையும் கடைப்பிடித்து வாழ்ந்தால் நலமாக இருக்கும்.
மார்ச் 21 உலக காடுகள் தினமாக கொண்டாடப்படுவதை அடுத்து மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது.’ நீரின்றி அமையாது உலகு‘ என்றார் திருவள்ளுவர். இந்த உலகில் உள்ள எந்த உயிரினமும் நீர் இல்லாமல் வாழ முடியாது. உணவு இல்லாமால் கூட சில நாட்கள் தாக்கு பிடிக்கலாம் ஆனால் நீர் இல்லாமல் ஒரு நாளை கடத்துவதே பெரிது. பூமியின் நீர்பரப்பு 40 இலட்சத்து 7 ஆயிரத்து 502 கிலோ மீட்டர். நிலப்பகுதி 29.2 விழுக்காடு. துருவப் பகுதியின் விட்டம் 12714 கிலோ மீட்டர்.பூமிப்பரப்பின் 70% நீரால் தானே மூடப்பட்டுள்ளது. பின்னர் தண்ணீருக்கு என்ன பஞ்சம் வரப்போகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். தண்ணீர் குடிப்பது என்றால் நல்ல நீராக இருந்தால் தான் அதை பருக முடியும். கடல் நீரை எடுத்து சிறிது குடிப்பதற்குள் தொண்டை கவ்விவிடும்.நன்னீர் என்று எடுத்துக்கொண்டால் பூமி பரப்பில் மொத்தமே 3% தான் உள்ளது. இந்த குடிநீரில் கிட்டத்தட்ட 65% பனிப்பாறைகளாக உறைந்துள்ளது. அதுபோக நதிகள், ஓடைகள், ஏரிகள் மற்றும் அணைகளில் 1% நன்னீர் தேங்கி நிற்கும். அது போக, நிலத்தடி நீராக 0.3% உள்ளது. அதிகப்படியான நன்னீர் இருக்கும் பனிப்பாறைகள் காலநிலை மாற்றத்தால் வேகமாக உருகி கடல் நீருடன் கலந்து வருகிறது. அதனால் மீதம் இருக்கும் நீரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய தேவை அதிக அவசியமாக மாறி வருகிறது.
நன்னீரின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நன்னீர் வளங்களின் நிலையான மேலாண்மையை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தேதியில் அதிகரித்து வரும் நீர் தேவையையும், அதை வீணாக்காமல் சரியாக பயன்படுத்து முறைகளையும் இந்த நாளில் ஆராய்ந்து மக்களுக்கு சொல்லி வருகின்றனர்.
உலக தண்ணீர் தினம் முதன்முதலில் 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (ஹிழிசிணிஞி) போது முன்மொழியப்பட்டது. 1993 ஆம் ஆண்டு ஐநா மார்ச் 22 ஆம் தேதியை உலக நீர் தினமாக நியமித்த பின்னர் இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
உலக தண்ணீர் தினம் நீரின் நிலையான மேலாண்மைக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாழ்க்கைக்கு நீரின் முக்கியத்துவத்தையும், தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக இந்த விலைமதிப்பற்ற வளத்தை நிலையான முறையில் நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் வரும் சந்ததியினர் பயன்பாட்டிற்கு கொஞ்சம் விட்டுச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தையும் நமக்கு நினைவூட்டும் ஒரு நிகழ்வாக இது அமைகிறது.
நீரின் நிலையான மேலாண்மை என்பது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக உலகின் நீர் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகும்.






