நாடியாட்:
குஜராத் மாநிலம் கேடியா மாவட்டத்தில் நாடியாட் அருகே பிலோதரா கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் கல்மேகசவ் அசவா அரிஷ்டா என்னும் ஆயுர்வேத மருந்தை வாங்கினர். கடந்த 2 நாட்களில் அதனை குடித்தவர்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் மெத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் காலாவதியான மருந்தை குடித்ததால் இந்த கோர சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆல்கஹால் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிபடுத்த இறந்தவர்களின் ரத்த மாதிரியை போலீசார் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இம்மாதிரியான காலாவதியான ஆயுர்வேத மருந்தை உட்கொள்ள வேண்டாம் என குஜராத் மாநில சுகாதாரத்துறை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.






