ட்விட்டர் நிறுவனத்தின் லோகோ, நாய் படமாக மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, டோஜ்காயின் கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
டெஸ்லா நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து, பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, டோஜ்காயின் கிரிப்டோகரன்சி குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அடிக்கடி ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து, கிரிப்டோகரன்சியின் மதிப்பு பெருமளவில் உயர்ந்தது. இதன் காரணமாக, 21 லட்சம் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் எலான் மஸ்குக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் எலான் மஸ்க் தரப்பு வழக்கு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், டோஜ்காயினுக்கு பயன்படுத்தப்படும் நாய் படத்தை, தனது டிவிட்டர் நிறுவனத்தின் லோகோவாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார். இதன்படி, ஏற்கனவே இருந்த நீல வண்ண குருவிக்குப் பதிலாக ட்விட்டரில் நாய் படம் இடம்பெற்றுள்ளது. ட்விட்டரின் லோகோ மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, டோஜ்காயின் கிரிப்டோகரன்சியின் மதிப்பு 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.