எடை குறைதல், நீரிழிவு நோய் கட்டுப்படுவது மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கு துணைநிற்பது உட்பட தினையின் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. இதில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் அதிகமாக உள்ளன. மேலும், இதன் சுவையின் காரணமாக பல்வேறு சமையல் பதார்த்தங்களில் அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு அற்புதமான மாற்றாக அமைகிறது.
தினை என்றால் என்ன?
தினை, செட்டாரியா இட்டாலிகா என்ற தாவரவியல் பெயருடன் அழைக்கப்படும் இது, ஒரு வகையான புல் வகை. தினை பல நூற்றாண்டுகளாக ஆசிய உணவு வகைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதிக சத்துள்ள தானியமான இது, பெரும்பாலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவு ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது கம்பு, வரகு போன்ற பிற சிறுதானியங்களை ஒத்தது. வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் நிறைந்த இந்த சிறுதானியத்தின் ஒரு தனித்துவமான சுவையால் பல உணவுப் பதார்த்தங்களில் சேர்க்கப்படுகிறது.
தினை எங்கே வளர்கிறது?
பல்வேறு காலநிலையிலும் மண்ணிலும் வளரக்கூடிய வறட்சி தாங்கும் பயிரான தினை, பொதுவாக மற்ற பயிர்கள் செழித்து வளராத வறண்ட பகுதிகளில் வளரக்கூடியது. இந்த சிறிய, மஞ்சள்நிற தானியங்கள் ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இது ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆசியாவில் குறிப்பாக சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இது பிரபலமாக உள்ளது. இந்தியாவில் முக்கியமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் தினை பயிரிடப்படுகிறது.
தினையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன?
தினையில் இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பது மட்டுமின்றி, gluten எனப்படும் பசைத்தன்மை இல்லாததால், gluten sensitivity பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு விருப்பத் தேர்வாக அமைகிறது. தினையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் விதமாக, கொழுப்பின் அளவைக் குறைக்க இது உதவுகிறது. எந்தவொரு டயட் முறையிலும் சிறந்த பங்களிப்பை வழங்கும் தினை, பெரும்பாலும் ஊட்டச்சத்து நிபுணர்களால் பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால் தினையின் நன்மைகள், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பையும் தாண்டி நிறைய இருக்கின்றன.
சாகுபடி செய்வதற்கும் அறுவடை செய்வதற்கும் எளிதான தினை, சவாலான பருவநிலை நிலவும் பகுதிகளில் முக்கிய உணவு ஆதாரமாக அமைகிறது. உண்மையில் நெல், கோதுமை போன்ற மற்ற பயிர்களை விட தினை வறட்சியையும் வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வறண்ட பகுதிகளில் உள்ள மக்கள், கடினமான சுற்றுச்சூழலை எதிர்கொண்டாலும் கூட அவர்களுக்கு ஊட்டமளிக்க துணைநிற்கிறது. ஒரு காலத்தில், தினை ஆசிய கலாச்சாரங்களில் பிரதான உணவாக இருந்தது. கோதுமை மற்றும் அரிசியின் சாகுபடி பரவலாக அதிகரித்ததன் காரணமாக, துரதிருஷ்டவசமாக தினையின் சாகுபடி குறைந்தது. எதிர்காலத்தில், புவி வெப்பமடைதல் காரணமாக உலகின் பல பகுதிகளில் சுற்றுச்சூழல் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், தினை போன்ற வறட்சி தாங்கும் பயிர்கள் நமது உணவுத் தேவைகளுக்கு தீர்வாக இருக்கும்.
நீங்கள் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ஒரு பிரியாணியைத் தேடுகிறீர்களென்றால், தினை பிரியாணியைத் தவிர வேறு எதையும் நாட வேண்டாம்! ஆராய்ச்சியின் படி, வழக்கமான அரிசி பிரியாணியுடன் ஒப்பிடும்போது, இந்த தினை பிரியாணி அதன் நிறம், தோற்றம், அமைப்பு, சுவை என அனைத்து விதத்திலும் அதிக Ratingsஐ பெற்றுள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!
தேவையான பொருட்கள்
1½ கப் தினை, 2 கப் தண்ணீர், சமையல் எண்ணெய் 1 மேசைக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி
அரைத்த இஞ்சி 1 தேக்கரண்டி, 1 கப் காய்கறிகள், (பட்டாணி, கேரட் மற்றும் குடைமிளகாய் போன்றவை)
நறுக்கியது
மஞ்சள் தூள் ½ தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் ½ தேக்கரண்டி
கரம் மசாலா ½ தேக்கரண்டி
சுவைக்கேற்ப உப்பு
½ கப் தயிர்
½ கப் நறுக்கிய தக்காளி
½ கப் நறுக்கிய கொத்தமல்லி
½ கப் நறுக்கிய புதினா
¼ கப் வெட்டப்பட்ட பாதாம் பருப்பு
¼ கப் உலர் திராட்சை
2 தேக்கரண்டி நெய்
¼ கப் தண்ணீர்
பிரியாணி செய்வதற்கு கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:
தினையை இரண்டு முறை நன்கு கழுவி, 45 முதல் 60 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெயை மிதமான சூட்டில் வைத்து சீரகம் தாளித்து, அதில் நறுக்கிய தக்காளி, உப்பு, கரம் மசாலா மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேருங்கள். தக்காளி மென்மையாக வேகும் வரை மூடி வைத்து சமைத்திடுங்கள். இஞ்சியைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்குங்கள். இதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து மென்மையாகும் வரை வதக்குங்கள். தண்ணீரை வடித்துவிட்டு, தினையையும் அந்த பாத்திரத்தில் சேர்த்து கிளறுங்கள். பின்னர் இதில் தயிர் சேருங்கள். கொத்தமல்லி, புதினா, பாதாம் மற்றும் உலர் திராட்சையையும் சேர்த்து கிளறுங்கள். நெய் சேர்த்து, பின் தேவையான தண்ணீர் சேர்த்துக் கிளறுங்கள்.
தீயைக் குறைத்து, பாத்திரத்தை ஒரு மூடியால் மூடுங்கள். 15-20 நிமிடங்களுக்கு வேக வைக்கலாம் அல்லது தினை வேகும் வரை, பிரியாணி வாசம் வரும் வரை சமைக்கலாம். தீயை அணைத்து 5 நிமிடம் மூடி வையுங்கள். விரும்பினால், கொத்தமல்லி, புதினா, பாதாம், உலர் திராட்சைகளைத் தூவி பிரியாணியை அலங்கரித்து சூடாகப் பரிமாறி, ருசித்து மகிழுங்கள்!