மேட்டூர்: அதிமுக எந்த கட்சிக்கும் அடிமையில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கோரணம்பட்டி, மோட்டூர், கன்னியாம்பட்டி, புதுப்பாளையம், சமுத்திரம், வெள்ளாளபுரம் பகுதிகளில் கட்சிக் கொடியேற்றிவைத்து, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி பேசியதாவது: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிமுக மக்கள் பணியில் ஈடுபடும்.
அதிமுக ஆட்சியில் 234 தொகுதிகளிலும் நலத் திட்டங்களை வழங்கினோம். ஆனால், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளையே திமுக நிறைவேற்றவில்லை. விலைவாசி அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் சில தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஸ்டாலின், கர்நாடக முதல்வர், நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து, தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடுமாறு வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், தண்ணீர் கேட்டு, மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் 15 நாட்களுக்குத்தான் தண்ணீர் திறக்க முடியும். இதனால் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டமடைவர். 20 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படும்.
காவிரி பிரச்சினைக்காக கடந்த ஆட்சியில், அதிமுக எம்.பி.க்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். ஆனால், தற்போதைய தமிழக எம்.பி.க்கள் இதற்காக குரல் கொடுக்கவில்லை.
பாஜகவுக்கு பழனிசாமி அடிமை என்று ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், நானும் எந்தக் கட்சிக்கும் அடிமையாக இருக்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.