பாகிஸ்தானின் பெஷாவரில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில், நேற்று மதியம் வழக்கம்போல இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், மசூதிக்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டனர், நேற்றைய நிலவரப்படி 46 பேர் பலியாகினர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டு வெடித்ததன் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களில் இன்னும் 57 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 27 பேர் காவல் துறை அதிகாரிகள் என கூறப்பட்டுள்ளது.