மும்பை:
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் குதிக்கின்றன.
தனது தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்ற சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் லக்னோவை 12 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. வேகப்பந்து வீச்சாளர் தென்ஆப்பிரிக்காவின் சிசாண்டா மகாலா இணைந்திருப்பது சென்னையின் பந்து வீச்சுக்கு மேலும் வலு சேர்க்கும்.
மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-மும்பை மோதல் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. சென்னை- மும்பை அணிகளும் இதுவரை 34 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் மும்பையும், 14-ல் சென்னையும் வெற்றி கண்டன. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னைஅணி மும்பைக்கு எதிராகத் தான் அதிகமாக தோற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
இதே போல் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பைக்கு எதிராக 10 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி அதில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட்,மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), சிசாண்டா மகாலா அல்லது மிட்செல் சான்ட்னெர், ஹேங்கர்கேகர், தீபக் சாஹர்.
மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹல் வதேரா, டிம் டேவிட், ஹிருத்திக் ஷோகீன், அர்ஷத் கான், பியுஷ் சாவ்லா அல்லது குமார் கார்த்திகேயா, ஜோப்ரா ஆர்ச்சர்.
முன்னதாக இன்று மாலை 3.30 மணிக்கு சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சை கவுகாத்தியில் எதிர்கொள்கிறது. தொடர்ந்து இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய டெல்லி அணி வெற்றிக்கணக்கை தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது. அந்த அணியில் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா) தனது திருமணத்துக்காக தாயகம் திரும்பியுள்ளதால் சில ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை.
இதே போல் ராஜஸ்தான் அணியில் கடந்த ஆட்டத்தில் விரலில் காயமடைந்த ஜோஸ் பட்லர் களம் காணுவது சந்தேகம் தான். ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமாவில் நேரடியாக பார்க்கலாம்.