மூன்றாண்டுகால விடியா திமுக-வின் செயலற்ற ஆட்சி அவலத்தைப் பற்றிய அறிக்கைக்கு, வாய்வீச்சு அட்டைக் கத்தி ஆர்.எஸ் பாரதி நேரடியாக
பதில் அளிக்காமல் தனிநபர் விமர்சனம் செய்துள்ளதற்கு கடும் கண்டனம்!
நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, ஆட்சியைப் பிடித்த திமுக-வின் மூன்றாண்டு சாதனை என்பது செயலற்ற ஆட்சி, பயனற்ற ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி’ என்பதை எங்களுடைய கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்’ அண்ணன் எடப்பாடியார் அவர்கள் புள்ளி விபரங்களுடன் அறிக்கையை வெளியிட்டார். 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போதும், 2021-ல் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போதும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பை வரி, பால் விலை உயர்வு, அரிசி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு; மணல், ஜல்லி, சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என்று, மூன்று ஆண்டு விடியா திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழக மக்கள் சிக்கித் திணறி வருகிறார்கள். இதைப் பற்றி உங்களுடைய தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் நேரடியாக பதிலளிக்க முடியாமல், வாய்ச் சொல் வீரரும், அட்டைக் கத்தி வீரருமான நீங்கள் தனிநபர் விமர்சனம் செய்துள்ளீர்கள்.
மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனை என்ன? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவந்து செயல்படுத்தப்பட்ட திட்டங்களைத் தவிர, புதிதாக வேறு ஏதேனும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டதா? அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? இதற்கு பதில் இல்லாமல், `அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில், பா.ஜ.க-வின் அடிமையாக இருந்தது’ என வாய்ச் சவடால் விட்டுள்ளீர்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தை ஆளும் சமயத்தில், 2019-ஆம் ஆண்டு காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று அஇஅதிமுக-வின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாட்கள் நாடாளுமன்ற அவையை செயல்பட விடாமல் முடக்கி, தமிழகத்தில் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டினோம். இதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். எங்களுடைய கழகப் பொதுச் செயலாளரின் துணிவு.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது “Go Back” என்பதும், ஆளும் கட்சியானவுடன் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து “Welcome” என்று வெள்ளை குடை பிடிப்பதும் திமுக-வின் வரலாறு. கர்நாடகாவில் தங்களது குடும்பத் தொழில்களைப் பாதுகாக்க, சுயநலவாதி திமுக தலைவர், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரைப் பெறாமல் டெல்டா மாவட்ட விவசாயிகளை வஞ்சித்ததைப் பற்றி பேச, அட்டைக் கத்தி பாரதி தயாரா? கடந்த மூன்றாண்டுகால திமுக ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை பற்றி குறிப்பிட்டால், அஇஅதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது என்று பொத்தாம் பொதுவாக ஆர்.எஸ். பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார். விடியா திமுக ஆட்சியினருக்கு சட்டம்-ஒழுங்கைப் பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது. விடியா திமுக அரசின் மூன்றாண்டு கால காவல்துறை மானியக் கோரிக்கை புத்தகத்தில் உள்ள புள்ளி விவரங்களைப் பார்த்தாலே, திமுக ஆட்சிக் காலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரியும். உதாரணமாக, 2019-ஆம் ஆண்டு மானபங்கம் வழக்குகள் 803-ஆக இருந்தது; 2022ல் 1,414-ஆக உயர்ந்துள்ளது. பாலியல் வன்கொடுமை 2019-ல் 7-ஆக இருந்தது; 2022-ல் 58-ஆக உயர்ந்துள்ளது. இந்தப் புள்ளி விபரங்கள் வாய் வீச்சு பாரதியின் மாலை கண்ணுக்கு தெரியவில்லையா? கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அஇஅதிமுக ஆட்சியில் அதிகம் என வாய்ச் சவடால் பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார். கஞ்சா போதைப் பொருட்கள் புழக்கத்தைப் பற்றி திமுக தலைவரோ, அவரது மகனோ அல்லது திமுக நிர்வாகிகளோ பேசுவதற்கு துளியும் அருகதை இல்லை. தமிழகம் முழுவதும் கஞ்சா, போதை மாத்திரைகள், கொக்கேயின் போன்ற விலை உயர்ந்த போதைப் பொருட்கள் புழக்கத்தைப் பற்றி பொதுமக்களும், ஊடகங்களும் காரி உமிழ்ந்திருக்கிறது. போதைப் பொருள் கடத்தலுக்காகவே யோசித்து, அயலக அணி என்பதை உருவாக்கி போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ள மாபியாவையே அயலக அணி அமைப்பின் நிர்வாகியாக்கி அவரிடமிருந்து நிதி பெற்றுதும், புகைப்படம் எடுத்துக்கொள்வதும், தமிழகத்தை போதைப் பொருட்களின் கேந்திரமாக மாற்றியதும் வெட்ட வெளிச்சமாக உள்ளது. இதை நாடறியும். இதைப் பற்றி உங்களது தலைவரும், வாய் வீச்சு பாரதியும் இதுவரை வாய் திறக்கவில்லை. ஏன்? ஆன்லைன் லாட்டரியில் உயிரிழக்கும் இளைஞர்களின் நலன் கருதி, கொண்டு வந்த ஆன்லைன் தடைச் சட்டத்தை சரியாக வாதிடாமல், காற்றில் பறக்கவிட்டு விட்டு, வாய் கிழியப் பேசுவது திமுக-வின் வாடிக்கை. அட்டைக் கத்தி பாரதி அவர்களே, மக்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்ட கும்பலிடமிருந்து ரூ. 509 கோடியை திமுக தேர்தல் நிதியாகப் பெற்றதை மக்கள் மறக்கவில்லை.
மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சியிலும் சரி, அண்ணன் எடப்பாடியார் அவர்களுடைய ஆட்சியிலும் சரி, நிதி மேலாண்மை, புதிய தொழில் முதலீட்டை ஈர்த்தல், விவசாயிகள் நலன், சிறு, குறு தொழில்களைப் பாதுகாத்தல், சுகாதாரம், சமூக நலத் திட்டங்கள், புதிய 11 மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு என்று கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள், கொரோனா காலத்தில் சிறப்பான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், குடிமராமத்து, குடிநீர்த் திட்டங்கள், மின் கட்டமைப்பு மேம்பாடு, வறட்சி, புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களை திறம்பட சமாளித்து மக்களைக் காப்பாற்றியது; சிறந்த உள்ளாட்சி நகராட்சி நிர்வாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றது என, எங்களுடைய ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட மக்கள் நலச் சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். வாய் வீச்சு அட்டைக் கத்தி பாரதி, திமுக-வின் மூன்றாண்டுகால ஆட்சியின் சாதனைகளைக் கூற முடியுமா? முடியாது! வேதனைகள்தான் அதிகம். ஆனால், அதை விட்டுவிட்டு, எங்களுடைய கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் மீது தனிநபர் விமர்சனம் செய்து, மூன்றாண்டுகால ஆட்சியின் அவலத்தை திசை திருப்பும் நாடகத்தை அரங்கேற்றி உள்ளீர்கள். தனிநபர் விமர்சனம் செய்வதென்றால் நாங்களும் தயார். சென்னைக்கு திருட்டு ரயிலில் வந்தது பற்றியும், தற்போது உங்களது தலைவர்களின் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் பற்றியும் பேச நாங்களும் தயார். சாக்கடையை கிண்டினால் ஊர் முழுக்க நாறும். அரசியல் விமர்சனம் என்றால், உங்கள் சாதனைகளைக் கூறுங்கள். தனி நபர் விமர்சனம் என்றால் நாங்களும் தயார். உங்களது தலைவர்கள் குடும்பம் தாங்காது. அட்டைக் கத்தி பாரதி அவர்களே, திமுக உங்களை ‘ரிட்டையர்டு’ ஆக்கிவிட்டது. மீண்டும் ஏதாவது ஒரு பதவி கிடைக்கும் என்ற நப்பாசையில் அட்டைக் கத்தியை வீசிப் பார்க்கிறீர்கள். ஏற்கெனவே, எங்களுடைய கழகப் பொதுச் செயலாளர் மீது பொய் வழக்கு ஒன்று போட்டு அதை நீதிமன்றத்தில் வாபஸ் வாங்க முயற்சித்தீர்கள். ஆனால், அண்ணன் எடப்பாடியார் அவர்கள் இது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன் என்று வழக்கைத் தொடர்ந்து நடத்தி நிரபராதி என்று நிரூபித்தார். இதுதான் தீரம்; அரசியல் நேர்மை. ஆனால், புதிய தலைமைச் செயலகம் கட்டிய புகார் பற்றிய வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க முயற்சித்த தீரர் உங்களுடைய தலைவர். நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத்தில் நடைபெற்ற மோசடி உங்களை, காலைச் சுற்றிய பாம்பு போல் வலம் வந்து கொண்டிருக்கிறது என்பதை பல சமூக ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆட்சி மாறும்; காட்சி மாறும் என்பதை நினைவூட்டுகிறேன். அப்போது அந்தப் புகார்கள் தூசி தட்டி விசாரணை நடத்தப்படும். வாய்க்கு வந்தபடி புலம்பித் திரிவதை திமுக-வினர் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் துவக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தை ‘குடும்ப முன்னேற்றக் கழகமாக’ மாற்றி செயல்பட்டு வரும் கொள்ளைக் கூட்டத்திறகு, எங்களின் பரிசுத்தமான இயக்கம் பற்றி விமர்சனம் செய்வதற்கு எந்தவித அருகதையும் இல்லை.யாகாவா ராயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு..’’ என்ற குறளின் அர்த்தத்தை உங்கள் குறளோவியத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்; இனியாவது திருந்துங்கள். இல்லையெனில் திருத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கிறேன் என்று அக்கட்சியின் பேரவைச் செயலாளர் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
One Response
மிகவும் சரியான விமர்சன பதில்
இதில் மறுப்பதற்கு ஏதும் கிடையாது
திமுக விற்கு சரியான காட்டமான பதிவு
பதிவு தயாரிப்பு செய்தவருக்கு மக்கள் மேம்பாட்டு கழகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்