சென்னை:
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக கல் குவாரி இயங்கி வருகிறது. இதுதொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் பாலாஜி மீது, சமூக விரோதிகள் நடத்திய கொலை வெறி தாக்குதலுக்கு, தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் சங்கம் (டி.யூ.ஜெ) கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் அரசு அனுமதி இன்றி சட்ட விரோத, கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இதுதொடர்பாக நியூஸ் தமிழ் செய்தி சேனல் தொலைகாட்சிக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, செய்தியாளர் அருண்குமார், ஒளிப்பதிவாளர் பாலாஜி ஆகியோரை கொண்ட குழுவினர், சட்ட விரோதமாக இயங்கி வரும் கிணத்துக் கடவு பகுதிக்கு நேற்று (29.03.2023) பிற்பகல் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு வந்த சமூக விரோத கும்பல், செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை சுற்றி வளைத்து, தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டே, கொலை வெறித் தாக்குதல் நடத்தியதுடன்,கேமரா உள்ளிட்ட ஒளிப்பதிவு கருவிகளை வலுக்கட்டாயமாக பிடுங்கமுயற்சித்துள்ளனர்.
சமூகவிரோத கும்பலின் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஒளிப்பதிவாளர் பாலாஜி, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். சட்டவிரோதமாக செயல் படும் கல்குவாரி குறித்து, சேகரிக்கும் பணியில், ஈடுப்பட்டிருந்த, நியூஸ் தமிழ் சேனலின், ஒளிப்பதிவாளர் பாலாஜி,செய்தியாளர் அருண்குமார் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தை டி.யூ.ஜெ. வன்மையாக கண்டிப்பதுடன், தாக்குதலில் ஈடுப்பட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்து, அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையையும், அரசையும், டி.யூ.ஜெ.வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மேலும் சட்டவிரோதமாக செயல்பட்டு அரசுக்கு பலகோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய சட்ட விரோத குவாரி குறித்து உரிய விசாரணை நடத்தி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்களையும், ஊழல்கள், முறை கேடுகளையும், சமூக விரோத செயல்களையும், வெளிப்படுத்தும், அச்சு மற்றும் காட்சி ஊடகத்தினர் செய்தி சேகரிப்பின் போது, சமூகவிரோதிகள், அரசியல் வாதிகள், காவல் துறையினர் உள்ளிட்டவர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்.
சமீபத்திய உதாரணம், இதே நியூஸ் தமிழ் ஊடகவியலாளர்கள், நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு, பணம் பரிசு பொருட்களை சில அரசியல் கட்சிகள் விநியோகம் செய்ததை, செய்தியாக்கி, நேரடி ஒளிபரப்பு செய்ததால், அடுத்தடுத்து 2 நாட்கள், கட்சி பேதம் இன்றி தாக்குதல் நடத்தியதால், தலைமை செய்தியாளர் ராஜேஷ், மூத்த ஒளிப்பதிவாளர் கருப்பையா, ஆகியோர் காயமடைந்து ஈரோடு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதை மறக்கமுடியுமா?
எனவே தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தாக்குதல்களிலிருந்து, பத்திரிகையாளர்களின் உயிரை பாதுகாக்கும் விதமாக, மகாராட்டிரா, சத்திஷ்கர் மாநிலங்களில் கொண்டுவரப்பட்டு அமலில் உள்ளது போல், “பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு” சட்டத்தை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக வியளாலர்கள், அமைப்புகள், சங்கங்களின் சார்பில்,டி.யூஜெ வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.