சென்னை:
மாநில அளவிலான போட்டிகள் விரைவில் சென்னையில் நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், சமூக நீதியின் தலைநகரான தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையின் தலைநகராகவும் மாற்றிய முதலமைச்சருக்கு நன்றி. விளையாட்டுத்துறைக்காக மற்றொரு மாநிலத்துடன் புரிந்துணர்வு மேற்கொள்வது இதுவே முதல்முறை. ரூ.114 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டது. மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடத்தப்படும். தமிழ்நாட்டில் 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும்.
கோபாலபுரத்தில் ரூ.7.78 கோடியில் குத்துச்சண்டை அகாடமி அமைக்கப்பட்டு வருகிறது. தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் ரூ.90 கோடியில் திறந்தவெளி மற்றும் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
சிவகங்கை மாவட்டம் சமத்துவபுரத்தில் விளையாட்டு மைதானம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த சிறுமி ஹாசினியை வைத்தே திறப்புவிழா நடத்த மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளேன். மாநில அளவிலான போட்டிகள் விரைவில் சென்னையில் நடத்தப்படும்.
விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறேன். எவரெஸ்ட் சிகரம் ஏறும் முத்தமிழ் செல்விக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு ரூ.11 கோடிக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. எந்தவொரு பரிந்துரையும் இருக்காமல், பயிற்சியாளர்கள் வெளிப்படை தன்மை, நேர்மையுடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மகளிருக்கான சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டு அரங்கங்களை உள்ளடக்கிய மாவட்ட விளையாட்டு வளாகங்கள் நிறுவப்படும்.
வேலை வாய்ப்புக்கு உத்திரவாதம் வழங்கும் வகையில் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, அரசு சார்பில் பயிற்சி திட்டங்களை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பிசிலி, லி&ஜி, ஜிசிஷி உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.