பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் அவர்களின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி தீர்வு காணும் வகையில், மக்களைத் தேடி மேயர் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்கள். மேயர் ஆர்.பிரியா அறிவிப்பின்படி, மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாமானது 03.05.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, மண்டலம்- 5க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்தும், 31.05.2023 அன்று மண்டலம்-6க்குட்பட்ட
பொதுமக்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ், அடையாறு மண்டலம், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் மேயர் ஆர்.பிரியா இன்று (05.07.2023) மண்டலம்-13க்குட்பட்ட பொதுமக்களின்
கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார். இந்தச் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, பள்ளிக் கூடத்தில் கட்டட வசதி, சமுதாயக் கூடம் மேம்பாடு, மழைநீர் வடிகால் வசதி, குடியிருப்பு வசதி,
பிறப்பு/இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 303 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இதில் பிறப்பு சான்றிதழ் தொடர்பான 11 மனுக்கள், சொத்து வரி பெயர் மாற்றம் தொடர்பான 3 மனுக்கள் என 14 மனுக்கள் மீது மேயர் அவர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதரக்
கோரிக்கை மனுக்கள் தொடர்புடைய துறைகள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும். இந்நிகழ்வினையொட்டி, சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது. செய்தியாளர்கள் சந்திப்பில் மாண்புமிகு மேயர் அவர்கள் பேசும்போது
தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் அறிவிப்பில் மக்களைத் தேடி மேயர் திட்டம் அறிவிக்கப்பட்டு, மண்டலம்-5 மற்றும்
மண்டலம்-6ல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, இன்று மண்டலம்-13க்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு குறைகளை தீர்வு காணும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள், சாலைப் பணிகள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் சீரமைப்பு பணிகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்,
தமிழ்நாடு மின்துறை போன்ற பிற துறைகளைச் சார்ந்த கோரிக்கைகளும்
தெரிவிக்கப்பட்டுள்ளது பிற துறைகளை சார்ந்த கோரிக்கைகள் மீது அந்தத் துறைகளுடன்
இணைந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மண்டலம்-5ல் நடைபெற்ற முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த 333 புகார்கள்
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இதில் 331 புகார்கள் மீது நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. மண்டலம்-6ல் நடைபெற்ற முகாமில் 241
புகார்கள் பெறப்பட்டு, இதில் 160 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள
புகார்களின் மீது மத்திய வட்டார துணை ஆணையாளர் மற்றும் மண்டல அலுவலர்
வாயிலாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், இன்று நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட கோரிக்கைகளின் மீது
உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களைத் தேடி மேயர் திட்டத்தில் மழைநீர்
வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், சென்னைப் பெருநகர் குடிநீர்
வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தொடர்பாகவும் பெரும்பாலான புகார்கள்
பெறப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற இடங்களில் சாலைகளை
சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் சில இடங்களில் முடிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளனவோ அந்த இடங்களில் உடனடியாக சாலைப் பணிகளை மேற்கொள்ளும்படி மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்கள் அனைத்து துறை சார்ந்த கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார். முன்னதாக, இந்த சிறப்பு முகாமில் முதலமைச்சர் சாலை விபத்து நிவாரண நிதியின் கீழ் தலா ரூ.1,00,000/- வீதம் 10 பயனாளிகளுக்கு காசோலைகளும், 20 கர்ப்பிணித்
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் சார்பில் 5 மகளிருக்கு தலா ரூ.5479/- மதிப்பிலான மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களும், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 6 சென்னை பள்ளியைச் சார்ந்த 21 மாணவர்களுக்கு தலா ரூ.2000/- பரிசுத்தொகையும், 8 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை மாதந்திர
உதவித் தொகையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகளையும் மாண்புமிகு மேயர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தென்சென்னை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு துணை மேயர் மு.மகேஷ்குமார் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், கூடுதல்
ஆணையாளர் (சுகாதாரம்) ங்கர்லால் குமாவத், இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., துணை ஆணையாளர்கள் ஷரண்யா அறி, (கல்வி) அவர்கள், எம்.பி.அமித், (தெற்கு வட்டாரம்) அவர்கள், மண்டலக்குழுத் தலைவர் ஆர்.துரைராஜ், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மண்டல அலுவலர் சரவண மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள்,
மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






