திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவதற்கான முகாம்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் அவரவர் பயன்படுத்தும் நியாய நிலைக்கடைகளிலேயே வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழக நுகர்பொருள் வானிப கழகம் சார்பில் சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள அமுதம் நியாயநிலைக்கடை எண்: எல்.ஏ.033 வாயிலாக இதுவரை 800 குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பங்களும், எல்.ஏ.007 நியாய விலைக்கடையில் இதுவரை 808 பேருக்கும் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் அருகிலேயே ஜாபர்கான்பேட்டை நூக வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மக்கள் வழங்கி வருகின்றனர்.
தாமதம் ஏன்?
இதுபற்றி பொதுமக்கள் தெரிவிக்கையில் விண்ணப்பங்கள் வழங்கும் ரேஷன்கடைகளுக்கு அருகிலேயே அதனை பூர்த்தி செய்து வழங்குவதற்கான மையம் உள்ளதால் எங்களுக்கு மிகவும் எளிதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதே சைதை பகுதியில் உள்ள காரனேஸ்வரர் பண்டகசாலை எல்.ஜி.007 எண் கொண்ட ரேஷன்கடையில் விண்ணப்பங்கள் பெற்ற மக்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் முகாம் நடத்தபபட உள்ளதாக அறிவித்துள்ளது. இதுபோன்று அருகருகே உள்ள ரேஷன்கடைகளில் வேறுபாடுகள் காட்டுவது ஏன்? அதேபோல் பள்ளிகளில் இலவசமாக முகாம்களை நடத்தாமல் தனியார் மண்டபத்தில் நடத்தி பணத்தை விரயம் செய்வது ஏன்? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.