அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே அங்கீகரித்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கிலும் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருப்பதும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்று கூறியிருப்பதும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்திருக்கும் முழுமையான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை முழுமையாக சீரமைப்பதற்காக பல்வேறு அதிரடி திட்டங்களை எடுக்க திட்டமிட்டு உள்ளார். ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் மற்றும் சிக்கல்களை உடைத்தெறிந்து கட்சியை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் எடப்பாடி பழனிசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அ.தி.மு.க.வை பாராளுமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற செய்தால் மட்டுமே ஜெயலலிதா இல்லாத நிலையிலும் அ.தி.மு.க. உயிரோட்டமாக இருக்கிறது என்பதை காட்ட முடியும் என அவர் நம்புகிறார். இதற்காக பல்வேறு அதிரடி திட்டங்களை மனதில் வைத்து அவர் செயல்பட தொடங்கி உள்ளார். அ.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் நிர்வாகிகளை முழுமையாக அரவணைத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராக எந்த சூழலிலும் யாரும் செயல்படக் கூடாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி அது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் தெரிவித்து உள்ளார். மாவட்ட செயலாளராக இருப்பவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை கையில் எடுத்து அதனை தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அதற்காக தங்கள் பகுதியில் போராட்டங்களையும் நடத்த வேண்டும் எனவும் அவர் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார். மாவட்ட செயலாளர்கள் இதுபோன்று செயல்பட்டால் மட்டுமே மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி செயல்படாத மாவட்ட செயலாளர்களை நீக்கவும் முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உரிய அறிவுரைகளையும் அவர் வழங்கி உள்ளார். அ.தி.மு.க.வில் உள்ள பல்வேறு அணிகளிலும் காலியாக உள்ள கட்சி பதவிகளை நிரப்பவும் அவர் முடிவு செய்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து மீண்டும் அ.தி.மு.க.வுக்கு திரும்பும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உரிய மதிப்பளித்து அவர்களையும் மாநில நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அவர்களது அணியில் தீவிரமாக செயல்படும் நிர்வாகிகளை கண்டறிந்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியில் ஏற்பட்டிருந்த சட்ட சிக்கல்களில் முழுமையான வெற்றியை பெற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி எந்த சூழலிலும் அதனை விட்டுக்கொடுக்காமல் அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தை முழுமையாக கட்சியில் செயல்படுத்த தனி ஆர்வம் காட்டி வருவதாக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும் போது, எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை நிர்வாகிகளை அரவணைத்து செல்வதில் பெயர் பெற்றவர். அதே நேரத்தில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் விடமாட்டார் என்றார். வருகிற பாராளுமன்ற தேர்தல் வெற்றி சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்பதை உணர்ந்து நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என பல கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார். வரும் காலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தையும், வேகத்தையும் அவர் தீவிரப்படுத்த உள்ளார். இதன் மூலம் தனது செல்வாக்கு என்ன என்பதையும், எம்.ஜி.ஆ.ரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அ.தி.மு.க.வை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கும் எடப்பாடி பழனிசாமி முழு வீச்சில் தயாராகிவிட்டார் எனவும் தெரிவித்தார். அ.தி.மு.க.வில் இளைஞர், இளம்பெண்கள் பாசறையை ஜெயலலிதா உருவாக்கி அதற்கு மிகுந்த முக்கியத்துவமும் அளித்தார். அவரது பாணியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட முடிவு செய்திருக்கிறார். இதை தொடர்ந்து புதிதாக வாக்களிக்க தயாராகும் இளம் வாக்காளர்களையும், இளம் பெண்களையும் கட்சியில் அதிக அளவில் சேர்த்து அ.தி.மு.க.வுக்கு புதுரத்தம் பாய்ச்ச வேண்டும் என்றும் கட்சியினருக்கு உத்தரவிட்டு உள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கட்சியின் கொள்கைகளை இளைஞர்கள், இளம்பெண்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளால் நிச்சயம் அ.தி.மு.க.வை மீண்டும் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமரவைக்க முடியும் எனவும் நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலமாக இருப்பதால் அதன்மூலமாக கடந்த கால அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். இதற்காக அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியை மேலும் பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்ப அணிக்கு தேவையான கணினி உள்ளிட்ட சாதனங்களை கூடுதலாக வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வில் கொள்கை பிடிப்போடு இருக்கும் இளைஞர்களை தகவல் தொழில்நுட்ப அணியில் அதிகம் சேர்த்து அவர்கள் மூலமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நலப்பணிகள் ஆகியவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இப்போதே நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்றும் நாம் தீவிரமாக கட்சிப்பணியையும், மக்கள் பணியையும் சேர்ந்து ஆற்றினால் நிச்சயம் தமிழகத்தில் ஆட்சியில் அமர முடியும் எனவும் நிர்வாகிகள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையூட்டும் வகையில் பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் மதுரையில் பிரமாண்டமாக மாநாடு நடத்தி தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமியின் புதிய அதிரடி பாய்ச்சல் அ.தி.மு.க.வுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





