மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இன்று (05.07.2026) புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில், நாடு தழுவிய 80-வது உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் (ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்) நிகழ்வில் பங்கேற்றார்.
ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ சத்ய சாயின் 100-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இந்த நிகழ்வு ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
தேசிய தலைநகர் தில்லியில் நடைபெற்ற நிகழ்வில், ஸும்பா, யோகா அமர்வுகளுடன், சமூக ஓட்டத்திலும் மிதிவண்டிப் பயணத்திலும் 9,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மற்ற இடங்களில், இந்த மிதிவண்டிப் பயணம் ஆர்ட் ஆஃப் லிவிங், ஹார்ட்ஃபுல்னஸ், ஈஷா அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் விதமாக, நிகழ்ச்சியில் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, எந்தவொரு நாடும் வளர்ந்த நாடாகக் கருதப்பட வேண்டுமானால், அதன் மக்களின் ஆரோக்கியம் இன்றியமையாதது என்றார். இந்தியர்கள் அனைவரும் தங்களது கைபேசித் திரைகளில் நேரத்தை செலவிடுவதைக் குறைத்து, குறைந்தபட்சம் தினமும் ஒரு மணி நேரத்தையாவது ஒதுக்கி, விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.







