சென்னை:
சொத்துவரி கட்டுவது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு நிதி ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் சொத்துவரி நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை நிலுவையின்றி செலுத்தி பெருநகர சென்னை மாநகர வளர்ச்சி பணிகளுக்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்த நிதியாண்டில் சொத்துவரி வசூல் இலக்காக ரூ.1,500 கோடி நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 22.03.2023 வரை ரூ. 1,408.97 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள சொத்துவரியினை வசூலிக்க வருவாய் துறையால் தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சொத்துவரி நிலுவையிலுள்ள சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல், குரல் ஒலி அழைப்புகள், கட் செவ்வி தகவல் (Whats app) ஆகியவை மூலம் சொத்துவரி செலுத்த கோருதல் பெருநகர சென்னை மாநகராட்சி நிறுவியுள்ள அறிவிப்பு பலகைகளில் (Vishual Media Display) சொத்துவரி செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு செய்தி வெளியீடுதல், திரையரங்குகளில் சொத்துவரி தொடர்பாக விழிப்புணர்வு படம் ஒளிபரப்புதல், குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மற்றும் பண்பலை அலைவரிசை ஆகியவை மூலம் சொத்துவரி செலுத்தக் கோரி விழிப்புணர்வு செய்தல், ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான சொத்துவரி நிலுவை வைத்துள்ள உரிமையாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் அறிவிப்புகள் சார்வு செய்தல் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் சொத்துவரி செலுத்த விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மொத்தமுள்ள 13.33 லட்சம் சொத்து உரிமையாளர்களில் 8.85 லட்சம் சொத்து உரிமையாளர் தங்களது சொத்துவரி முழுமையாக செலுத்தி பெருநகர சென்னை மாநகராட்சியின் வளர்ச்சி பணிக்கு தங்களது பங்கினை அளித்துள்ளனர். மேலும், நிதியாண்டின் இறுதி நாட்களான தற்போது, ஒவ்வொரு நாளும் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை செலுத்தி வருகின்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி, சொத்துவரி உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை எளிதாக செலுத்த கீழ்கண்ட வழிமுறைகள் ஏற்படுத்தி உள்ளது.
- வரி வசூலிப்பாளர்களின் கையடக்க கருவி மூலமாகவும் (காசோலை, வரைவோலை கடன் மற்றும் பற்று அட்டை வாயிலாக)
- பெருநகர சென்னை மாநகராட்சி இணைய தளம் www.chennaicorporation.gov.in வாயிலாக பரிமாற்றக் கட்டணம் ஏதுமில்லாமல் செலுத்தலாம்.
- பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்தம் இயற்றியுள்ள வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ், சிட்டி யூனியன், கரூர் வைஸ்யா, எச்.டி.எப்.சி., ஐ.டி.பி.ஐ, கனரா, தமிழ்நாடு மெர்கன்டைல், கொடாக் மகேந்திரா, லஷ்மி விலாஸ், மற்றும் இன்டஸ்இந்த் ஆகிய வங்கிகள் மூலம் பணமாகவும் செலுத்தலாம்.
- பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்கள், ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் இ-சேவை மையங்களின் மூலமாகவும் கட்டலாம்.
- நம்ம சென்னை மற்றும் பே.டி.எம். – கைபேசி செயலி மூலமாகவும் செலுத்தலாம்.
- BBPS மூலமாகவும் செலுத்தலாம்.
சொத்துவரி அதிக நிலுவை வைத்துள்ள சொத்துவரி உரிமையாளர் கட்டிடங்களின் முகப்புகளில் “கட்டிடத்தின் உரிமையாளர் சொத்துவரியினை நீண்ட நாட்களாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார்” என அறிவிப்பு பதாகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சொத்துவரியினை அனைத்து உரிமையாளர்களும் கட்டாயம் நிலுவையின்றி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில், சொத்துவரி நிலுவை வைத்துள்ள முதன்மையான 100 சொத்து உரிமையாளர்களின் பட்டியல் மற்றும் நீதிமன்ற வழக்கு நிலுவையின் காரணமாக சொத்துவரி செலுத்த தடை பெற்று வசூல் செய்ய இயலாத பட்டியல் ஆகியவை இணைய தளத்திலும் மற்றும் தினசரி செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து சொத்து உரிமையாளர்களும் இந்த நிதியாண்டு முடிவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் சொத்துவரியினை நிலுவையின்றி செலுத்தி பெருநகர சென்னை மாநகர வளர்ச்சி பணிகளுக்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






