புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த கீழத்தானியத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் களைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழதானியம் கரையூர் அய்யனார் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 500 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டியை இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், கொட்டும் மழையில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகள் மாடுபிடி வீரர்களை அச்சுறுத்தியபடி சென்றன. சில காளை மாடுபிடி வீரர் தீரமுடன் திமிலை பிடித்து அடக்கினர்.

போட்டியில் வென்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு வீட்டு உபயோ பொருட்கள், டிவி, சைக்கிள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியின்போது காளைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர். இவர்களில் 6 பேர் மாடுபிடி வீரர்கள், 12 பேர் பார்வையாளர்கள் ஆவர். இவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிக்சை அளித்தனர். ஒருவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






