கோடை வெயிலின் தாக்கத்தினை முன்னிட்டு, வாகன ஓட்டிகளின் நலனுக்காக முதற்கட்டமாக 10 போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருவதையொட்டி, கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ரிப்பன் கட்டட சந்திப்பு, ராஜா முத்தையா சாலை சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள நிழல் பந்தலினை இன்று பார்வையிட்டு வாகன ஓட்டிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது :
கோடை வெயிலின் தாக்கத்தினை முன்னிட்டு, பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் வாகன ஓட்டிகளின் நலனுக்காக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக முதற்கட்டமாக 10 போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் கண்டறியப்பட்டு அங்கு காவல்துறை உதவியுடன் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தல்கள் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு பெரிய வாகனங்கள் செல்லும் வகையில்
5.30 மீ. உயர மைல் ஸ்டீல் கம்பிகளின் கட்டுமானத்துடன், மேலே போடப்படும் போரஸ் துணி கீழே விழாதவண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்காக மண்பானைகளில் குடிநீர் வைக்கப்பட்டு தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 34,000 தெருக்கள் உள்ளன. முதற்கட்டமாக பேருந்து சாலைகள், முக்கிய சந்திப்புகள், அதிக போக்குவரத்து இருக்கக்கூடிய சிக்னல் பகுதிகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் இந்த நிழல் பந்தல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் தொடர்ச்சியாக, மழைக்காலங்களில் இதில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு, மேற்புறத்தில் ஃபைபர் அமைப்புகள் போடப்படவும் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சில வாகன ஓட்டிகளின் வேண்டுகோளுக்கிணங்க, நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் இதுபோன்ற நிழல் பந்தல்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வெயிலின் தாக்கம் 28ஆம் தேதி வரை இருக்கும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் 199 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தல்களை வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவப் பணியாளர்களின் மேற்பார்வையில் 299 இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,44,527 நபர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் முதலில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து நிழல் பந்தல்கள் அமைக்க விருப்பம் தெரிவிக்கும் தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்புடனும் இதுபோன்ற நிழல் பந்தல்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தலைமைப் பொறியாளர் எஸ். ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.







