
.
நாள் : 06.11.2025.
புதிய பணியிடங்களை மருத்துவத்துறையில் உருவாக்க வேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி.
சென்ற ஆண்டு நாடு முழுவதும் 600 க்கும் மேற்பட்ட உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாகச் சென்றன .
தமிழ்நாட்டிலும் 40 இடங்கள் காலியாகப் போய்விட்டன.
இந்த இடங்களை நிரப்பிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகும் ஏராளமான இடங்கள் காலியாகப் போய்விட்டன.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கான இடங்கள் தான் காலியாகப் போயின.
அரசு மருத்துவர்களுக்கான இடங்கள் காலியாகப் போவது, அரசு மருத்துவர்களுக்கு மட்டுமன்றி, அரசு மருத்துவமனைகளுக்கும் ,ஏழை நோயாளிகளுக்கும் பெரும் இழப்பாகும். இத்தகையப் போக்கை தடுத்திட வேண்டும்.
உயர் சிறப்பு மருத்துவ கலந்தாய்வின் போது அந்த மருத்துவ இடங்களில் சேர போதுமான அரசு மருத்துவர்கள் இல்லாததால் அவ்விடங்கள் காலியாகின்றன. அவ்வாறு காலியாவதை தடுத்திட வேண்டும்.
அதற்கு , அரசு மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில், அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர , குறைந்தபட்சம் இரண்டாண்டு அரசுப் பணியை முடித்திருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்த வேண்டும்.
உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வில், மருத்துவ இடங்களை எடுக்க, இரண்டு ஆண்டு அரசுப்பணி முடித்தவர்கள் இல்லாத சூழலில், ஓராண்டு பணி முடித்தவர்களை அவ்விடங்களை எடுத்திட அனுமதிக்க வேண்டும்.
அதன் பிறகும் இடங்கள் காலியாகப் இருந்தால், இறுதிக் கட்டத்தில்
அவற்றில் ,அரசுப் பணியில் புதிதாகச் சேர்ந்த மருத்துவர்களையும் சேர , அனுமதிக்கலாம்.
அதற்கு ஏதுவாக, எம்.டி / எம்.எஸ் படிப்பை முடித்து தற்பொழுது, அரசுப்பணியில் சேர்ந்துள்ள அனைத்து அரசு மருத்துவர்களையும் , வரும் கல்வி ஆண்டிற்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான , நீட் எஸ்.எஸ் தேர்வை எழுதிட அனுமதிக்க வேண்டும்.
தற்பொழுது அந்த தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சனையில் உடனடி முடிவை தமிழ்நாடு அரசு எடுத்திட வேண்டும்.
மருத்துவ இடங்களில் சேர்வதில் மாநில உரிமை பறிபோகும் நிலை உள்ளது. மாநில உரிமைக்கு எதிரான, மாநில இட ஒதுக்கீடு
(Domiciliary reservation ) ரத்து என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் உள்ள அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீடும் காக்கப்பட வேண்டும்.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் உள்ள அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் காலியாகப் போகும் நிலையை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக, தொலைநோக்குப் பார்வையுடன் எடுத்திட வேண்டும்.
புற்று நோய் சிகிச்சை வழங்கிட பல அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 60 மருத்துவர்கள் பணியிடங்களை ,தமிழ்நாடு அரசு உருவாக்கி இருப்பது வரவேற்பிற்குரியது.
அதே சமயம் பல மருத்துவக் கல்லூரிகளில் இருந்த மருத்துவர்களுக்கான பணியிடங்களை ,தமிழ்நாடு அரசு ஒழித்துக் கட்டியிருப்பது சரியல்ல.
எனவே,60 பணியிடங்களை ஒழித்துக் கட்டியதை ரத்து செய்ய வேண்டும்.
புதிய மருத்துவமனைகள் திறக்கும் பொழுதும், புதிய துறைகள் உருவாக்கும் பொழுதும், அந்த இடங்களின் தேவைகளுக்கு ஏற்ப, விதிகளுக்கு ஏற்ப , புதிய மருத்துவப் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். செவிலியர்கள் உள்ளிட்ட இதர அனைத்து மருத்துவத்துறை பணியாளர்களுக்கான பணியிடங்களையும் அவ்வாறு புதிதாக உருவாக்கி நிரப்பிட வேண்டும். அதற்கு மாறாக ஏற்கனவே பணியில் இருப்பவர்களை இட மாறுதல் செய்து
(Redeployment ) நிரப்புவதை தவிர்க்க வேண்டும்.