சென்னை:
பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்கள் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் அவர்களுக்கு கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு ஓய்வூதிய தொகை ரூ.12000ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கஷ்டமான சூழ்நிலையில் கூட உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு அரசு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் ஓய்வுக்கு பிறகு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு ரூ.10 ஆயிரம் மாதம் ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. இந்த ஓய்வூதியம் நாளிதழ்கள், பருவ இதழ்கள், செய்தி முகமைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு பத்திரிகையாளர் ஓய்வூதியம் மாதம் ரூ. 10000ல் இருந்து ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ. 5000ல் இருந்து ரூ. 6000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.