குறிப்பாக பாதிக்கப்படும் பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிறது: ஆளுநர்

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எனது இளைய பாரதம், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து நடத்தும் 17-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியைத் தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவி இன்று (24 நவம்பர் 2025) தொடங்கிவைத்தார்.
நாடு முழுவதும் நடைபெறும் பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற 17-வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியில் சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த 220 பழங்குடி இளைஞர்கள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர், தாம் குழந்தைப் பருவத்தில் பள்ளிக்கு செல்ல 8 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டியிருந்தது, அப்போது எங்கள் கிராமத்தில் மின்சாரம், சாலை வசதி, பள்ளிக்கூடம் போன்றவை இல்லை. ஆனால் இன்று நாடு முழுவதும் மின்சாரம், சாலை வசதி, கல்வி நிறுவனங்கள் போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக மேம்பட்டுள்ளன என்று கூறினார்.
நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் பல பகுதிகள் மிகவும் பின்தங்கியதாக இருந்தன. குறிப்பாக பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் வளர்ச்சி தடைப்பட்டதாகவும், இன்று அந்த பிரச்சனைகள் பெருமளவில் குறைந்துள்ளதால், பழங்குடி சமூகத்திற்கான வளர்ச்சி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக பாதிக்கப்படும் பழங்குடியின மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் இதன் மூலம் அம்மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கலாச்சாரத்தை காக்கும் அதே வேளையில் கல்வியிலும் வாழ்க்கையிலும் உயர வேண்டும் என்றார். தற்போது பழங்குடி சமூகத்தின் பெண்கள் ஆண்களுக்கு இணையாக முன்னேறுவதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இன்றைய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் பல உள்ளன; ஆனால் அதற்கு கல்வி அவசியம் என்றும், பட்டம் பெற்றால் மட்டும் போதாது; திறன்களை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். பழங்குடியினரின் இயற்கையுடன் இயைந்த வாழ்க்கைமுறை மற்றும் கலாச்சாரம் நாட்டின் பெருமை எனவும், அதை பாதுகாக்க வேண்டியது நமது கூட்டுக் கடமை எனவும் ஆளுநர் வலியுறுத்தினார். நம் நாகரிகத்தின் அமைதியான காவலர்கள் நமது பழங்குடியின சொந்தங்கள் என்றும் அவர் கூறினார்.
பின்னர் மாணவர்களுடன் ஆளுநர் காலந்துரையாடினார், அப்போது ஒரு மாணவர் அவரது வளர்ச்சிப் பயணம் குறித்து கேட்டபோது, சிறு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த தாம் ஒரு ஆராய்ச்சியாளராக விரும்பியதாகவும் பின்பு இந்திய குடிமைப்பணியில் தேர்ச்சி பெற்று இந்திய காவல் பணியில் இணைந்து பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவத்தையும், பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி பின்னர் ஆளுநராக நியமிக்கப்பட்டதையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
